உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்


உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 1 Dec 2018 10:45 PM GMT (Updated: 1 Dec 2018 9:09 PM GMT)

பெரம்பலூரில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பெரம்பலூர்,

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இந்தியன் செஞ்சிலுவை சங்கம், இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு ஊர்வலம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 584 இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவ- மாணவிகளும், 35 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, காமராஜர் வளைவு வழியாக சென்று, கடைவீதி, பழைய நகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் மாணவ- மாணவிகள் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர்.

விழிப்புணர்வு ஊர்வலத்தில் பெரம்பலூர் மாவட்ட கல்வி அதிகாரி அம்பிகாபதி, மாவட்ட கூட்டு மருந்து சிகிச்சை மைய மருத்துவ அதிகாரி டாக்டர் திவ்யா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, இந்திய செஞ்சிலுவை சங்க பெரம்பலூர் மாவட்ட கவுரவ செயலாளர் ஜெயராமன், மாவட்ட, மாநில பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், இந்தியன் செஞ்சிலுவை சங்க மாவட்ட கன்வீனர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கருணாகரன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவ- மாணவிகள் எய்ட்ஸ் சின்னம் வடிவில் நின்றனர். பின்னர் எய்ட்ஸ் தின உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி எய்ட்ஸ் தின உறுதிமொழியினை வாசிக்க, மாவட்ட கூட்டு மருந்து, சிகிச்சை மைய மருத்துவ அதிகாரி டாக்டர் திவ்யா மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் பின்தொடர்ந்து படித்து உறுதிமொழியினை எடுத்து கொண்டனர். இதில் கூட்டு மருந்து சிகிச்சை மையம், சுகவாழ்வு மையம், தன்னம்பிக்கை மையம் ஆகியவற்றின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story