என் மகளை பற்றி எங்களுக்கு தெரியும் பாடம் நடத்தும் வேலையை மட்டும் செய்யுங்கள் என்று அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்த பெற்றோர்


என் மகளை பற்றி எங்களுக்கு தெரியும் பாடம் நடத்தும் வேலையை மட்டும் செய்யுங்கள் என்று அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்த பெற்றோர்
x
தினத்தந்தி 2 Dec 2018 5:15 AM IST (Updated: 2 Dec 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பஸ்சில் மாணவர்களுடன் மாணவிகள் நெருங்கி பழகியதை தட்டிக்கேட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பெற்றோர் கண்டித்தனர். பஸ்சில் மாணவர்களுடன் மாணவிகள் நெருங்கி பழகியதை தட்டிக்கேட்டதால் சம்பவம்.

திருப்பூர்,

இன்றைய குழந்தைகள் 12 வயதுக்கு மேற்பட்டவர்களாகி விட்டால் அவர்களை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க கூடிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதே போல் இன்றைய குழந்தைகள் வீடுகளில் இருப்பதை விட பள்ளிகளில் தான் அதிக நேரம் இருக்கிறார்கள். இதனால் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளை கண்காணிக்கும் பொறுப்பு ஆசிரியர்களையே சேருகிறது.

முன்பெல்லாம் பள்ளியில் படிக்கும் போது சரியாக பாடம் படிக்காவிட்டால் ஆசிரியர் பிரம்பை எடுத்து கை வீங்கும் அளவிற்கு அடிப்பார்கள். ஆசிரியர் மாணவரை கண்டித்தால் அன்றைய கால பெற்றோர், ஏன் என் பிள்ளைகளை அடித்தீர்கள்? என்று கேட்க மாட்டார்கள். ஆனால் இன்றோ.. பள்ளிகளில் மாணவரை அடித்தால் ஏன் என் பிள்ளையை அடித்தீர்கள்? என்று கேட்டு ஆசிரியர் மீது போலீசில் புகார் கொடுக்கும் அளவிற்கு இன்றைய பெற்றோர்கள் சிலரின் சிந்தனை மாறி விட்டது. இதன் விளைவு. ஆசிரியர்கள் இப்போது பள்ளி மாணவ-மாணவிகளை எல்லாம் கண்டிப்பதில்லை. முன்பெல்லாம் பேனாவில் மை தீர்ந்து விட்டால் மையை நிரப்பி தான் பயன்படுத்தி வந்தனர். பென்சில் கடைசி நுனி வரைக்கும் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று.. பள்ளி குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்து வருகின்றனர். இதன் விளைவு இன்றைய குழந்தைகளை லேசாக கண்டித்தாலே தற்கொலை உள்ளிட்ட விபரீத முடிவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இருப்பினும் அவர்களை கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும் ஆசிரியர்-ஆசிரியைகள் மாணவ-மாணவிகள் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி திருத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூரில் ஒரு அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் 2 பேர் அரசு பஸ்சில் வரும் போது மாணவர்களுடன் நெருங்கி பழகி வந்ததை பார்த்த அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து அவர்களை கண்டிக்கும்படி கூறிய போது தலைமை ஆசிரியரை அவர்கள் கண்டித்தது வேதனை அளிக்கிறது. அது பற்றிய விவரம் வருமாறு:-

திருப்பூர் பழனியம்மாள் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவிகள் 2 பேர் சம்பவத்தன்று அரசு பஸ்சில் வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு உள்ளனர். காலை நேர பஸ் என்பதால் அதில் பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. அதே போல் மற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளும் அதில் பயணம் செய்தனர்.

பஸ் பயணத்தின் போது பிளஸ்-2 மாணவிகள் 2 பேர், வேறு ஒரு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து பஸ்சில் நெருங்கி பழகினார்கள். இது பஸ்சில் பயணம் செய்த பயணிகளை முகம் சுளிக்க வைத்தது. தங்கள் பள்ளி சீருடை, பேட்ஜ் அணிந்து பிளஸ்-2 படிக்கும் 2 மாணவிகளும் நடந்து கொண்ட விதம் சக மாணவிகளை அதிர்ச்சிக்குள் ளாக்கியது. இதனால் தங்கள் பள்ளியின் மானம் பறி போய் விடுமே என்று மாணவிகள் இந்த சம்பவத்தை பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், அந்த 2 மாணவிகளையும் தனது அறைக்கு அழைத்து விசாரித்தார். பின்னர் அவர்கள் 2 பேரிடமும் நாளைக்கு பள்ளிக்கு வரும் போது பெற்றோரை அழைத்து வரும்படி கூறி அனுப்பினார்.

மறுநாள் பள்ளிக்கு வந்த 2 மாணவிகளின் பெற்றோரும், தலைமை ஆசிரியரை சந்தித்து தங்களை பள்ளிக்கு அழைத்ததன் காரணம் குறித்து கேட்டனர். அப்போது தலைமை ஆசிரியர், பள்ளி மாணவிகளின் செயலால் தங்கள் பள்ளி பற்றி மக்கள் மத்தியில் தவறான எண்ணம் ஏற்பட்டு விடும். எனவே மகளை கண்டியுங்கள் என்று கூறி இருக்கிறார்.

இதை கேட்டதும் மாணவிகளின் பெற்றோர் ஆத்திரம் அடைந்து, எங்கள் மகளை பற்றி எங்களுக்கு தெரியும். அவர்கள் மாணவர்களுடன் ஒட்டி உரசுவார்கள். அவர்கள் மடியில் கூட உட்கார்ந்து வருவார்கள். அதைப்பற்றி நீங்கள் பேச வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் வேலையை மட்டும் பாருங்கள் என்று கூறி விட்டு வேகமாக சென்று விட்டனர்.

இதை கேட்டு வாயடைத்து போய் நின்ற தலைமை ஆசிரியருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பெற்றோர்களின் இந்த வார்த்தைகள் மற்ற ஆசிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மாணவர்களை அடிக்கக்கூடாது. திட்டக்கூடாது என்று ஆசிரியர்களின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ள நிலையில், இது போன்ற சில பெற்றோரின் செயலால் ஆசிரியர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமே என்று பணியாற்றி வரும் பல சிறந்த ஆசிரியர்களுக்கு இந்த செயல் அவர்கள் மனதை மாற்றி விடுமோ? என்று அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கண்டித்து வளர்த்தால் மட்டுமே அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியும். அவர்களின் எதிர்காலமும் நல்லதாக இருக்கும்.

Next Story