தொடர்ந்து 40 மணி நேரம் பாடம் நடத்துகிறார்: மதுரை ஆசிரியை சாதனை முயற்சி
மதுரை ஆசிரியை சாதனை முயற்சியாக தொடர்ந்து 40 மணி நேரம் பாடம் நடத்தி வருகிறார்.
மதுரை,
மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்தவர் நஜூமுதீன். இவருடைய மனைவி சுலைகாபானு. இவர் அரசரடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 27 வருடங்களாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து 40 மணி நேரம் மாணவர்களுக்கு பாடம் நடத்தி சாதனை புரிய திட்டமிட்டிருந்தார். இந்த சாதனை நிகழ்ச்சி மதுரை ரெயில் நிலையம் அருகே உள்ள மதுரைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை 9.10 மணிக்கு தொடங்கியது. அவர் நடத்தும் பாடத்தை கவனிப்பதற்காக மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்திருந்தனர். இதற்காக ஒதுக்கப்பட்ட ஒரு அரங்கத்தில் இந்த சாதனை முயற்சி நடைபெற்று வருகிறது.
இதனை கண்காணிப்பதற்காக ‘சாம்பியன் வேர்ல்ட் ரெக்கார்டு‘ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நட்சத்திரா, விஸ்வநாத் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் சுலைகாபானு, எவ்வளவு நேரம் பாடம் நடத்துகிறார் என்பதை நடுவர்களாக இருந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து சுலைகாபானு கூறும்போது, “தற்போதுள்ள மாணவர்களுக்கு கணினி அறிவு அதிக அளவில் இருக்கிறது. அதுபோல், ஆங்கிலத்திறமையும் இருக்கிறது. ஆனால் வரலாறு பாடம் குறித்து ஏராளமான மாணவர்கள் அறிந்திருப்பதில்லை. அதனை ஒரு பாடமாகவும் படிப்பதில்லை. எனவே வரலாறு பாடம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சாதனையை செய்ய இருக்கிறேன். தொடர்ந்து 40 மணி நேரம் பாடம் நடத்தும் அளவிற்கு என்னிடம் திறமை இருக்கிறது. இதனை கவனிப்பதற்கு பல்வேறு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் வந்திருக்கின்றனர். சுழற்சி முறையில், அவர்கள் 2 அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருப்பார்கள். இதுபோல் இரவிலும் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து பாடம் நடத்த இருக்கிறேன். அப்போது பாடம் கவனிப்பதற்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், என்னிடம் படித்த முன்னாள் மாணவர்கள் வருகின்றனர். அவர்களுக்கு தொடர்ந்து பாடம் நடத்துவேன். மாணவர்களுக்கு வரலாறு பாடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். அதற்காக தான் இந்த சாதனை முயற்சி“ என்றார்.
சாம்பியன் வேர்ல்ட் ரெக்கார்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நட்சத்திரா கூறும்போது, “தொடர்ந்து 40 மணி நேரம் பாடம் நடத்துவது என்பது மிகவும் கடினமான விஷயம் தான். இதற்கு முன்னர் வடமாநிலத்தில் தான் இதுபோல் ஒருவர் சாதனை நிகழ்த்தி உள்ளார். அவரது சாதனையை முறியடிக்கும் விதமாக சுலைகாபானு சாதனை செய்ய இருக்கிறார். தமிழகத்தில் யாரும் இதுபோல் சாதனையை செய்ததில்லை. தமிழகத்தில் ஒருவர், தொடர்ந்து 10 மணி நேரம் ஆங்கிலத்தில் பாடம் நடத்தி சாதனை புரிந்துள்ளார். ஆனால், வரலாறு பாடத்தில் இதுபோல் யாரும் இதுவரை சாதனை செய்தது கிடையாது. தற்போது சாதனை நிகழ்த்தும் ஆசிரியை சுலைகாபானு, வரலாறு பாடம் நடத்தி சாதனை நிகழ்த்துகிறார். அவர் எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்கிறார், என்னென்ன தலைப்புகளில் பாடம் நடத்துகிறார், என்னென்ன விளையாட்டுகள் மூலம் மாணவர்களை கவர்கிறார் என்பதை தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்கிறோம்“ என்றார்.