கிராமப்புறங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை தேவை; மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுவரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்காமல் இருக்க ஆய்வு நடவடிக்க மேற்கொண்டு வருகிறது. கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நின்றால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
ஆனால் கிராமப்புறங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது கேள்விக்குறியாகவே உள்ளது. ஒருசில பகுதிகளில் பெயருக்கு கொசு ஒழிப்பு ஸ்டிக்கர்களை மட்டும் ஒட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். பெரும்பாலான கிராமங்களில் பொது இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் கழிவுநீரும் மழைநீரும் தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி கிராமப்புற மக்களுக்கு நோய் பரவு அபாயம் உள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களிலும் நகர்புறங்களிலும் முறையாக கடைபிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்திவரும் மாவட்ட நிர்வாகம் கிராமப்பகுதிகளில் எந்த அளவுக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதை கண்காணிப்பதில்லை. ஊராட்சி நிர்வாகங்கள் எதையும் கண்டுகொள்வதில்லை.
குல்லூர் சந்தையில் பழைய காலனி பகுதியில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும்நீர் மாசுபட்டு அதில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் தூங்க முடிவதில்லை என்று கூறுகின்றனர். மேலும் பகல் நேரங்களிலும் கொசுத்தொல்லை இருப்பதால் டெங்கு அபாயத்தில் உள்ளனர். குல்லூர் சந்தை புதுக்காலனி பகுதியில் வாறுகால் வசதியில்லாததால் காலனி பகுதியை சுற்றிலும் கழிவுநீர் தேங்கிக்கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகவே உள்ளது. இங்கு டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் முறையாக நடைபெறாததையே காட்டுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பதோடு முறையாக செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராமப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் மருந்துகள் தெளிப்பதோடு மட்டுமல்லாமல் கிராமப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நடவடிக்கைகளை முறையாக செய்தால்தான் நோய் பாதிப்பு வருவதை தடுக்க முடியும் வந்த பின்பு நடவடிக்கை எடுப்பதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை.