சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் வக்கீல்களுக்கு பயிற்சி; நீதிபதி தொடங்கி வைத்தார்
மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு புதிய சட்டங்கள் குறித்த பயிற்சி முகாமை மாவட்ட நீதிபதி தொடங்கிவைத்தார்.
சிவகங்கை,
மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் தாலுகா சட்டப்பணிக்குழுக்களுடன் இணைந்து பணியாற்றி வரும் வழக்கறிஞர்களுக்கு புதிய சட்டங்கள் குறித்த பயிற்சி முகாம் சிவகங்கையில் நடைபெற்றது. இதன் தொடக்க விழா மாவட்ட முதன்மை நீதிபதி கே.வி.செந்தூர்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி டி.பி. வடிவேலு, சிவகங்கை வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜசேகரன், செயலாளர் முத்துராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி பேசியதாவது:– தேசிய சட்டப்பணிகள் ஆணையமும், மாநில சட்டப்பணிகள் ஆணையமும் இணைந்து மூத்த வழக்கறிஞர்களை பயிற்சியாளர்களாக மாவட்டம் முழுவதும் அனுப்பி வைத்து வருகிறது. இந்த பயிற்சியாளாக்ள் வளர்ந்து வரும் காலத்திற்கேற்ப சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து தொடர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட நீதிமன்றத்தில் சுமார் 100–க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு அனுபவம் வாய்ந்த மூத்த வழக்கறிஞர்கள் புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கிறார்கள். இதை வளர்ந்து வரும் இளம் வழக்கறிஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வறு அவர் கூறினார்
நிகழ்ச்சியில் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த பயிற்சி முகாமில் சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் ரத்னதாரா, சுதர்சனசுந்தர் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.