கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு

கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர்.
பரமக்குடி,
பரமக்குடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஜெகராயன் நிருபர்களிடம் கூறியதாவது:– ஆன்லைன் இணையதள சேவை சான்றிதழுக்கான செலவின தொகை வழங்க வலியுறுத்தியும், இணையவழி சேவைக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கியிருக்கும் கட்டிடங்களில் கழிப்பறை, குடிநீர், மின் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தும் அடங்கல் முறையில் தற்போதைய நிலையை மாற்றி கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
சொந்த ஊரை விட்டு வேறு ஊர்களில் தங்கி பல்வேறு கிராமங்களுக்கு பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்கவும், பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது லேப்டாப்களை தாசில்தாரிடம் ஒப்படைத்து போராட்டம் நடத்தினோம்.
ஆனால் தமிழக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் தற்போது வரை நீடித்து வருகிறது. ஆகையால் மாநில மைய முடிவின்படி கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28–ந்தேதி முதல் இணையதளம் மூலம் பட்டா மாற்றம், சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி உள்ளோம். வருகிற 5–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இரவு நேர தர்ணாவும் 7–ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டமும், 10–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என தொடர் போராட்டம் நடத்த கிராம நிர்வாக அலுவலர்கள் முடிவு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், தென்மண்டல செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.