சேதராப்பட்டு தனியார் தொழிற்சாலையில் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி கால் துண்டானது
சேதராப்பட்டு தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் எந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால் துண்டானது.
காலாப்பட்டு,
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே வி.பரங்கினி காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 39). இவர் புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டில் உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று நடராஜன் தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது கட்டிங் எந்திரம் பழுதானது.
அதனை நடராஜன் சரி செய்து கொண்டிருந்தபோது திடீரென கட்டிங் எந்திரம் ஓடத் தொடங்கியது. அதில் நடராஜனில் கால் சிக்கி சிதைந்தது.
அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் நடராஜன் காலை இழந்தார். அவருடைய கால் துண்டிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சேதராப்பட்டு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.