போலீஸ் நிலையத்தில் ‘குழந்தைகள்’
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த பெண் போலீஸ் அர்ச்சனா தனது கைக்குழந்தையை போலீஸ் நிலைய மேஜையில் படுக்கவைத்துவிட்டு பணிபுரிந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த பெண் போலீஸ் அர்ச்சனா தனது கைக்குழந்தையை போலீஸ் நிலைய மேஜையில் படுக்கவைத்துவிட்டு பணிபுரிந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அது, பிரசவ விடுப்புக்கு பிறகு பணிக்கு திரும்பும் பெண் போலீசார் தங்கள் குழந்தைகளை பிரிந்து வந்து பணி செய்யும்போது எதிர்கொள்ளும் மன ரீதியான பிரச்சினைகளை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. அதைத்தொடர்ந்து இப்படிப்பட்ட சூழலில் பணிபுரியும் பெண் போலீசார் தங்கள் குழந்தைகளை உடன் இருந்து பராமரிப்பதற்கு ஏதுவான வசதிகளை செய்து கொடுக்கும் முயற்சியில் தெலுங்கானா காவல்துறை களம் இறங்கியுள்ளது.
முதல்கட்டமாக அங்குள்ள ரச்சகொண்டா நகரத்திற்குட்பட்ட ஷரூர்நகர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் நல மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு ‘நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ரச்சகொண்டா நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் பாகவத் முயற்சியில் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசாரின் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பொழுது போக்குவதற்கு தேவையான விளையாட்டு சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளை உடன் இருந்து கவனித்துக்கொள்வதற்காக ஒரு பெண் போலீஸ், பெண் பாதுகாப்பு அதிகாரி மற்றும் பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண் போலீசார் தங்கள் குழந்தைகளை அங்கு விட்டுவிட்டு தங்கள் பணியை தொடரலாம். பணிக்கு இடையே நான்கு முறை குழந்தைகளை சந்தித்து பேசி அவர்களுடன் நேரம் செலவிடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த போலீஸ் நிலையத்தில் 40 பெண் போலீசார் பணிபுரிகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். அதனால் குழந்தைகள் நல மையம் அமைக்கப்பட்டதற்கு அவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுபற்றி போலீஸ் கமிஷனர் மகேஷ் பகாவத் கூறுகையில், ‘‘ஜான்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த பெண் போலீசின் குழந்தை படத்தை பார்த்ததும் இந்த முடிவை எடுத்தோம். குழந்தையை பிரிந்து பணி செய்வது எவ்வளவு கடினமானது என்பதை உணர்ந்தோம். குழந்தையை பெற்றெடுத்த சில மாதங்களில் பணிக்கு திரும்பும் பெரும்பாலான தாய்மார்கள் பணிக்கு இடையே உணர்வு ரீதியாக தங்கள் குழந்தைகளை பற்றி கவலைப்படுகிறார்கள். ஷரூர்நகர் போலீஸ் நிலையத்தில் 90 சதவீதம் பெண் போலீசார் மற்றும் பெண் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். முதல்கட்ட பரிசோதனை முயற்சியாக இதை செய்துள்ளோம். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற போலீஸ் நிலையங்களில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்கிறார்.
Related Tags :
Next Story