தோவாளை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி மரக்கிளைகளை வெட்டிய போது பரிதாபம்


தோவாளை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி மரக்கிளைகளை வெட்டிய போது பரிதாபம்
x
தினத்தந்தி 3 Dec 2018 4:30 AM IST (Updated: 2 Dec 2018 8:44 PM IST)
t-max-icont-min-icon

தோவாளை அருகே மின்கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டிய போது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

ஆரல்வாய்மொழி,

தோவாளை அருகே விசுவாசபுரம், பண்டாரபுரத்தை சேர்ந்தவர் தேவ அருள் செல்வபெருமாள் (வயது 45), விவசாயி. இவருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகனும்,

ஒரு மகளும் உள்ளனர்.  இவர்களது வீட்டு வளாகத்தில் ஒரு மாமரம் நிற்கிறது. இந்த மரத்தின் கிளைகள் அந்த வழியாக செல்லும் மின்கம்பிகளை தொட்டபடி சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் தேவ அருள் செல்வபெருமாள், மின்கம்பிகளுக்கு இடையூறாக நின்ற மரக்கிளைகளை வெட்டி அகற்ற நினைத்தார். இதற்காக அவர் மரத்தில் ஏறி மரக்கிளைகளை அரிவாளால் வெட்ட தொடங்கினார்.

மின்சாரம் பாய்ந்தது

அப்போது, எதிர்பாராத விதமாக மின்கம்பி மீது அரிவாள் பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தேவஅருள் செல்வபெருமாள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story