திருக்கோவிலூரில்: புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு ‘சீல்’ வைப்பு - உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை


திருக்கோவிலூரில்: புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு ‘சீல்’ வைப்பு - உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Dec 2018 3:30 AM IST (Updated: 2 Dec 2018 11:37 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறையை உணவு பாதுகாப்புத்துறையினர் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திருக்கோவிலூரில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 18 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வீட்டில் இருந்த காசி (வயது38) என்பவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், புகையிலை பொருட்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்டு திருக்கோவிலூர் பகுதி கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததோடு, புகையிலை பொருட்கள் வைத்திருந்த அறையையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

சோதனையின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருக்கோவிலூர் ரவிக்குமார், உளுந்தூர்பேட்டை கதிரவன், கள்ளக்குறிச்சி முருகன், கண்டாச்சிபுரம் பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.மேலும் இதுகுறித்து உணவுபாதுகாப்புத்துறையினர் கொடுத்த புகாரின்பேரில் காசி மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story