திண்டிவனத்தில்: ஏரியில் மூழ்கி 4 மாணவர்கள் பலி - நீச்சல் பயிற்சிக்கு சென்றபோது நேர்ந்த பரிதாபம்


திண்டிவனத்தில்: ஏரியில் மூழ்கி 4 மாணவர்கள் பலி - நீச்சல் பயிற்சிக்கு சென்றபோது நேர்ந்த பரிதாபம்
x
தினத்தந்தி 2 Dec 2018 10:00 PM GMT (Updated: 3 Dec 2018 12:25 AM GMT)

திண்டிவனத்தில் நீச்சல் பயிற்சிக்கு சென்றபோது 4 மாணவர்கள் ஏரியில் மூழ்கி பலியானார்கள். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சலவாதியை சேர்ந்தவர் பாஸ்கர். தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுடைய குழந்தைகள் அபிராமிஸ்ரீ(வயது 16). திருமுருகன்(14). இதேபோல் பாஸ்கருடைய மனைவியின் அண்ணன் முனுசாமி என்பவர் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். முனுசாமியின் மனைவி தேவி. இவர்களுடைய குழந்தைகள் அஸ்வினி(15), ஆகாஷ்(14). சாரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அபிராமிஸ்ரீ பிளஸ்-1 வகுப்பும், திருமுருகன் 9-ம் வகுப்பும், அஸ்வினி 10-ம் வகுப்பும், ஆகாஷ் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் பாஸ்கர் தனது குழந்தைகள் மற்றும் முனுசாமியின் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பதற்காக அருகில் உள்ள ஏரிக்கு அழைத்து சென்றார். அப்போது, பாஸ்கர், தான் சிறுநீர் கழித்து வருவதாகவும், தான் வரும் வரை கரையில் நிற்குமாறும் குழந்தைகளிடம் கூறி சென்றார். பின்னர் சிறிதுநேரம் கழித்து பாஸ்கர் வந்து பார்த்தபோது, உடைகள் மட்டும் கரையில் இருந்தது. 4 பேரையும் காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கர், செல்போன் மூலம் உறவினர்களுக்கும், திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஏரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஏரியில் இறங்கி மாணவர்களை தேடினர். அப்போது அபிராமிஸ்ரீ, அவரது தம்பி திருமுருகன், அஸ்வினி, அவரது தம்பி ஆகாஷ் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். 4 பேரின் உடல்களும் ஏரிக்கரையில் வரிசையாக வைக்கப்பட்டது. அதனை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதனிடையே திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், ரோஷணை சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவ-மாணவிகளின் உடல்களை பார்வையிட்டு விசாரித்தனர்.

விசாரணையில், பாஸ்கர் நேற்று முன்தினம் 4 பேருக்கும் ஏரியில் நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளார். அதேபோல் 2-வது நாளாக நேற்றும் நீச்சல் கற்றுக்கொடுப்பதற்காக 4 பேரையும் ஏரிக்கு அழைத்து சென்றுள்ளார். உடனே 4 பேரும், தாங்களாகவே ஏரியில் இறங்கி நீச்சல் பயிற்சி பெற முயன்றுள்ளனர். ஆனால் முழுமையாக நீச்சல் தெரியாததால் அவர்கள், 4 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பலியான 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே ஏரிக்கு குளிக்க வந்த மேலும் 2 குழந்தைகளை காணவில்லை என கிராமத்தில் தகவல் பரவியது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்புத்துறையினர் ஏரிக்கு விரைந்து வந்து ஏரியில் இறங்கி தீவிரமாக தேடினர். ஏரி முழுவதும் தேடி பார்த்ததில் அங்கு யாரும் இல்லை என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதற்கிடையே மாயமானதாக கூறப்பட்ட அந்த 2 குழந்தைகள் வீடு திரும்பினர். இதனால் உறவினர்கள் நிம்மதி பெரு மூச்சுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏரியில் மூழ்கி 4 மாணவ-மாணவிகள் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

Next Story