50 பைசா நாணயங்களை இணைத்து; 5 ரூபாயாக மாற்றி புழக்கத்தில் விடும் மர்ம நபர்கள் - வியாபாரிகள் பாதிப்பு
50 பைசா நாணயங்களை இணைத்து 5 ரூபாயாக மாற்றி மர்ம நபர்கள் புழக்கத்தில் விட்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.
பழனி,
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு, குறு வியாபாரிகள் அதிக அளவில் உள்ளனர். பேன்சி பொருட்கள், மளிகை பொருட்கள், புத்தகம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அவர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த கடைகளுக்கு வரும் சிலர் 5 ரூபாய் நாணயங்களை கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
விற்பனையில் கவனம் செலுத்தும் வியாபாரிகளும் அந்த நாணயத்தின் வடிவம், எடையை கருத்தில் கொண்டு 5 ரூபாய் தான் என நினைத்து வாங்கிக்கொண்டு பொருட்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்துவிடுகின்றனர்.
அதன் பின்னர் நாணயங்களை கணக்கெடுக்கும் போது தான், 5 ரூபாய் நாணயங்களில் பல போலியானது என்பது அவர்களுக்கு தெரியவருகிறது. இதனால் அதிர்ச்சியடையும் வியாபாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பழனியை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட 50 பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை.
அந்த நாணயங்களின் வடிவம் தற்போது உள்ள 5 ரூபாய் நாணயங்கள் போன்று தான் இருக்கும். ஆனால் அவற்றின் தடிமன் குறைவாக இருக்கும். ஆனால் சில மோசடி நபர்கள் இரண்டு 50 பைசா நாணயங்களை இருபக்கமும் சிங்கமுக தலைகள் தெரியும்படி இணைத்து ஒட்டிவிடுகின்றனர்.
பின்னர் அந்த நாணயங்களை எங்களிடம் கொடுத்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதனை பார்க்கும் எவரும் அது போலியான 5 ரூபாய் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. நாணயத்தை இருபக்கமும் திருப்பி நன்றாக சரிபார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இதனால் சிறு, குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுபோன்று போலி நாணயங்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story