கொடைரோடு அருகே பரபரப்பு: திண்டுக்கல் எம்.பி.-ரெயில்வே ஊழியர் மோதல்


கொடைரோடு அருகே பரபரப்பு: திண்டுக்கல் எம்.பி.-ரெயில்வே ஊழியர் மோதல்
x
தினத்தந்தி 3 Dec 2018 3:30 AM IST (Updated: 3 Dec 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே திண்டுக்கல் எம்.பி.- ரெயில்வே ஊழியர் மோதிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைரோடு, 

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் உதயகுமார். அ.தி.மு.க.வை சேர்ந்தவர். நேற்று இவர், நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் வந்து கொண்டிருந்தார். மாலை 5.30 மணியளவில் அவருடைய கார் கொடைரோடு அருகே உள்ள அழகம்பட்டி ரெயில்வே கேட் அருகே வந்தபோது, அந்த வழியாக திருச்செந்தூரில் இருந்து பாலக்காட்டுக்கு பயணிகள் ரெயில் சென்றது.

இதன்காரணமாக ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அதன் அருகே உதயகுமார் காரை நிறுத்தி விட்டு காத்திருந்தார். அங்கு கொடைரோட்டை சேர்ந்த கேட் கீப்பர் மணிமாறன் (வயது 25) பணியில் இருந்தார். அவர் ரெயில் சென்ற பிறகும் கேட்டை திறக்காமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் காரை விட்டு இறங்கிய உதயகுமார் எம்.பி., மணிமாறனை சத்தம்போட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் மோதிக்கொண்டனர்.

அப்போது உதயகுமாரும், மணிமாறனும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. அங்கிருந்தவர்கள் 2 பேரையும் விலக்கி விட்டனர். இதனையடுத்து உதயகுமார் தனது காரில் புறப்பட்டு சென்றார். பின்னர் அவர், அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ரெயில்வே ஊழியர் மணிமாறன் தன்னை நெஞ்சில் தாக்கியதாக கூறியுள்ளார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உதயகுமார், அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு இடையே அதே ரெயில்வே கேட்டில் மணிமாறன் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

இரவு 7.45 மணிக்கு மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு பயணிகள் ரெயில் வந்தது. அந்தசமயத்தில் ரெயில்வே கேட்டை மணிமாறன் அடைக்காமல் விட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக சிக்னல் கிடைக்காமல் ரெயில் கேட்டுக்கு முன்பாகவே ரெயில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரெயில்வே கேட் அடைக்கப்பட்டதால் மீண்டும் அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. எம்.பி.-ரெயில்வே ஊழியர் இடையே நடந்த மோதல் சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. 

Next Story