விருகம்பாக்கத்தில் அ.ம.மு.க. நிர்வாகி காருக்கு தீ வைப்பு அ.தி.மு.க.வினருடன் மோதலால் பரபரப்பு


விருகம்பாக்கத்தில் அ.ம.மு.க. நிர்வாகி காருக்கு தீ வைப்பு அ.தி.மு.க.வினருடன் மோதலால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Dec 2018 4:15 AM IST (Updated: 3 Dec 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

விருகம்பாக்கத்தில் அ.ம.மு.க. நிர்வாகி கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய மர்மநபர்கள் காருக்கு தீ வைத்தனர். இதில் கார் லேசான சேதம் அடைந்தது. பின்னர் போலீஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க- அ.ம.மு.க.வினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம் அருணாசலம் சாலையைச் சேர்ந்தவர் குணசீலன் (வயது 36). அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில், விருகம்பாக்கம் பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். கேபிள் டி.வி.யும் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு குணசீலன், தனது காரை சாலிகிராமம், தசரதபுரம், 2-வது தெருவில் உள்ள தனது கேபிள் டி.வி. அலுவலகம் எதிரே நிறுத்தி இருந்தார். நேற்று அதிகாலையில் அவரது கார் கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தனர்.

அங்கு அடையாளம் தெரியாத 5 பேர், குணசீலன் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியதுடன், கார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். அப்போது அங்கு வந்த குணசீலனின் ஆதரவாளர்கள், சத்தம் போட்டதால் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

உடனடியாக காரில் எரிந்த தீயை தண்ணீர் மற்றும் மணலை கொட்டி அணைத்தனர். எனினும் காரின் முன்பகுதி லேசாக கருகியது. இதுகுறித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் இரவு எம்.ஜி.ஆர். நகரில் அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரை குணசீலனின் ஆதரவாளர்கள் கிழித்து விட்டதாகவும், அந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதும் விசாரணையில் தெரிந்தது.

எனவே அ.தி.மு.க. பேனரை கிழித்ததற்கு பழிவாங்கும் நோக்கில் குணசீலன் கார் கண்ணாடியை உடைத்து, காருக்கு தீவைத்தனரா? அல்லது முன் விரோதம் காரணமாக வேறு யாராவது இந்த செயலில் ஈடுபட்டனரா? என பல்வேறு கோணங்களில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக நேற்று விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு குணசீலன் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். இதை அறிந்ததும் அங்கு அ.தி.மு.க.வினரும் திரண்டனர். அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர் களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

பின்னர் இரு தரப்பினரும் தனித்தனியே நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. மீண்டும் அவர்களை போலீசார் விரட்டிவிட்டனர். இந்த மோதலில் ஒருவருக்கு மூக்கு உடைந்து, ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்க விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அபுசாலி தெருவில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் அதிகளவில் செல்லாமலும், கூட்டம் கூடாமலும் பார்த்து வருகின்றனர்.

Next Story