வெண்ணெய்மலை முருகன் கோவிலில் படிபூஜை திரளான பக்தர்கள் வழிபாடு


வெண்ணெய்மலை முருகன் கோவிலில் படிபூஜை திரளான பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 3 Dec 2018 4:00 AM IST (Updated: 3 Dec 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

கரூர் வெண்ணெய்மலை முருகன் கோவிலில் நடந்த திருப்புகழ் படிபூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கரூர்,

கரூர் வெண்ணெய்மலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று 44-ம் ஆண்டு திருப்புகழ் படிபூஜை வழிபாடு நடந்தது. இதையொட்டி கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால் குடம், தீர்த்தக்குடம் மற்றும் காவடி தூக்கி கொண்டு ஊர்வலமாக கோவிலை நோக்கி புறப்பட்டு வந்தனர். இதற்கிடையே ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்களை சேர்ந்தவர்களும் பால்குடம் எடுத்து கொண்டு வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தனர். இந்த ஊர்வலமானது வாங்கபாளையம் மெயின்ரோடு வழியாக சென்று கோவிலை அடைந்தது. அப்போது முருக பெருமானுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதற்கிடையே மலைமீது உள்ள கோவிலின் படிக்கட்டுகளில் வாழை இலையை வைத்து தேங்காய், பழம் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. பின்னர் வழிபாட்டுக்குழுவினர், முருகனின் பெருமைகளை உணர்த்தும் திருப்புகழ் பாடல்களை பாடி ஒவ்வொரு படிக்கும் தீபாராதனை காண்பித்து பூஜை செய்தனர். அப்போது பக்தர்கள் பரவசமடைந்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... என கோஷங்களை எழுப்பி முருகனை வழிபட்டனர்.

இதில் கரூர், வெண்ணெய்மலை, காதப்பாறை, திருமாநிலையூர், வெங்கமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பலர் கலந்து கொண்டு வழிபட்டனர். மலைமீது உள்ள முருகனை தரிசிப்பதற்காக படிக்கட்டுகளில் ஏறி ஆண்டுதோறும் செல்வதால், அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக படிபூஜை நடத்தப்படுவதாக வழிபாட்டுக்குழுவினர் தெரிவித்தனர். 

Next Story