ஊழலுக்கு எதிராக பேசிய பா.ஜனதா, லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை சித்தராமையா குற்றச்சாட்டு


ஊழலுக்கு எதிராக பேசிய பா.ஜனதா, லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை சித்தராமையா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 Dec 2018 5:15 AM IST (Updated: 3 Dec 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஊழலுக்கு எதிராக பேசிய பா.ஜனதா, லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

உப்பள்ளி,

கர்நாடக கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பெரிய அளவுக்கு போராட்டம் நடத்தினர். ஆனால் மத்திய அரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின்படி விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்வதாக தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா சொன்னது.

ஆனால் அந்த வாக்குறுதியை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை கர்நாடக அரசு வழங்குகிறது. நிலுவைத்தொகையையும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மந்திரிசபையை உடனடியாக விரிவாக்கம் செய்யும்படி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் வற்புறுத்தவில்லை. மந்திரிசபை விரிவாக்கம் செய்தால் அன்றைய தினமே கூட்டணி அரசு கவிழும் என்று ஈசுவரப்பா கூறியுள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜனதா கட்சிக்கு கூட்டணி அரசு பற்றி பேச தகுதி இல்லை. கூட்டணி அரசு சுதந்திரமாக செயல்படுகிறது.

பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ. மந்திரியாக வேண்டும் என்று விருப்பப்படுகிறார். அவர் எந்த அதிருப்தியையும் வெளிப்படுத்தவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் யாரும் கூட்டம் நடத்தவில்லை. வருகிற 5-ந் தேதி கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்கப்படும்.

பா.ஜனதாவுக்கு முழு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், முதல்-மந்திரியாக வேண்டும் என்று எடியூரப்பா கனவு காண்கிறார். கூட்டணி அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். இந்திரா உணவகத்தை நடத்த நிதி பற்றாக்குறை ஒன்றும் இல்லை. பா.ஜனதாவினர் ஏழைகளுக்கு எதிரானவர்கள்.

அதனால் இந்திரா உணவகத்தை எதிர்க்கிறார்கள். ஊழலுக்கு எதிராக பேசி தான், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை லோக்பால் அமைப்பை அக்கட்சி உருவாக்கவில்லை. இதன் காரணமாக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் நடத்துவதாக அறிவித்துள்ளார். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

இந்த பேட்டியின் போது மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே உடன் இருந்தார். இதன்பின்னர் சித்தராமையா கார் மூலம் பாகல்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story