காயல்பட்டினத்தில் பரிதாபம்: 3 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி


காயல்பட்டினத்தில் பரிதாபம்: 3 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி
x
தினத்தந்தி 3 Dec 2018 3:45 AM IST (Updated: 3 Dec 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் 3 வயது குழந்தை மின்சாரம் தாக்கி0 பலியானது.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஓடைக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 24) கொத்தனார். இவருடைய மனைவி நாகராணி. பிரபுவிற்கு தஞ்சை மாவட்டம் பூதலூர் சொந்த ஊராகும். அவர் அங்கு இருந்து வேலை தேடி வந்து கடைசியில் காயல்பட்டினத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு யோகேஷ்வரன் (3) என்ற மகனும், 6 மாத பெண் குழந்தையும் உண்டு.

இந்த நிலையில் நேற்று காலையில் நாகராணி தனது மகனை வீட்டுக்கு அருகே உள்ள முனியசாமி கோவில் முன்பு விளையாட விட்டுவிட்டு அங்கு அமர்ந்து உறவினர்களிடம் பேசி கொண்டு இருந்தார்.

கோவில் அருகே மின்மோட்டார் வசதியுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மின்மோட்டாரின் அறை திறந்து கிடந்ததுடன், மின்மோட்டாருடன் இணைக்கப்பட்ட மின் வயர்கள் அறைக்கு வெளியே தொங்கிக் கொண்டு இருந்தன. இதனை அங்கு விளையாடி கொண்டு இருந்த யோகேஷ்வரன் பார்த்து, அந்த வயரை பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டு, மயங்கியது.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு காயல்பட்டினத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை யோகேஷ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செல்வி பத்திரகாளி என்ற பவுன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காயல்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story