கஜா புயலால் பாதிப்பு: தமிழகத்தை பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும் - சரத்குமார் பேட்டி


கஜா புயலால் பாதிப்பு: தமிழகத்தை பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும் - சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 3 Dec 2018 4:15 AM IST (Updated: 3 Dec 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சமத்துவ மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட மகளிரணி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என அறிக்கை கொடுக்கப்பட்டு இருப்பது மனவேதனையை ஏற்படுத்துகிறது. மேகதாது அணை பிரச்சினையில் மத்திய நீர்வளத்துறையில் இருந்து ஆய்வு செய்ய ஒப்புதல் கொடுத்த நிலையில், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அனுமதி கொடுத்ததே தமிழகத்துக்கு பின்னடைவு தான். இரு மாநிலத்திற்கு இடையே ஓடுகிற நதி ஒரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்த பிரச்சினையில் மாநில அரசை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்.

கஜா புயலின் போது தமிழக அரசு எச்சரிக்கை செய்தது மிகவும் பாராட்டத்தக்கது. தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு நிவாரணம் வழங்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வாக ரூ.15 ஆயிரம் கோடி தமிழக அரசு கேட்டது. ஆனால் மத்திய அரசு நிவாரணமாக ரூ.600 கோடிக்கு குறைவாக தான் கொடுத்துள்ளது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் மோடி வராதது தமிழகத்தை வஞ்சிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் 20 தொகுதிக்கு இடைத்தேர்தல் என்பது அவல நிலை என்று தான் சொல்ல வேண்டும். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஒரு ஆண்டுகள் அல்லது 1½ ஆண்டுகள் தான் பதவியில் இருப்பார்கள். 5 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினர்களாக தேர்வு செய்தும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இந்த விஷயத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்து, 2-வது இடத்தில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் இருக்கும் வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் ச.ம.க., எந்த கூட்டணியில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளர் சுந்தர், இளைஞர் அணி செயலாளர் குரூஸ் திவாகர், மாவட்ட செயலாளர்கள் தயாளன், வில்சன், மாவட்ட அவைத்தலைவர் சங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர்கள் ரவி, தேவராஜ், ஜான்பால், லென்சிங், தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்திகுமார், ஒன்றிய துணை செயலாளர் கெலின்ராஜ், மகளிர் அணி ஒன்றிய துணை செயலாளர்கள் மணிமேகலை, முத்துலட்சுமி, நகர மகளிர் அணி செயலாளர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருச்செந்தூரைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் கணேசுக்கு கட்சி சார்பில் கல்வி உதவிதொகையாக ரூ.30 ஆயிரத்தை சரத்குமார் வழங்கினார்.

முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் மின்தொழிலாளர்களின் பணி மிகவும் பெரியது. அவர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். உடனடி நிவாரண பணிகளும் நடந்து வருகிறது. முதலில் அனைவருக்கும் மின்சாரம் சென்றடைய வேண்டியது அவசியம். அதற்கு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் நிவாரணமும் சென்றடைய வேண்டும். தமிழகத்தை பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும். சுமார் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டு இருக்கும். அதற்கு ஏற்ப மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும்‘ என்றார். 

Next Story