நெய்வயல்– அல்லிக்கோட்டை இடையே கிடப்பில் கிடக்கும் சாலை பணியால் பஸ் போக்குவரத்து நிறுத்தம்; மாணவ–மாணவிகள் கடும்அவதி


நெய்வயல்– அல்லிக்கோட்டை இடையே கிடப்பில் கிடக்கும் சாலை பணியால் பஸ் போக்குவரத்து நிறுத்தம்; மாணவ–மாணவிகள் கடும்அவதி
x
தினத்தந்தி 2 Dec 2018 10:40 PM GMT (Updated: 2 Dec 2018 10:40 PM GMT)

நெய்வயல்–அல்லிக்கோட்டை இடையே சாலை பணிகள் கிடப்பில் கிடப்பதால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ–மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகா நெய்வயல் கிராமத்தில் இருந்து அல்லிக்கோட்டை வரை சுமார் 5 கிலோ மீட்டர் சாலை மிகவும் சேதமடைந்திருந்தது. இந்த சாலை வாகனம் செல்வதற்கும், பொதுமக்கள் நடமாட்டத்திற்கும் மிகவும் இடையூறாக இருந்து வந்தது. இதனால் இச்சாலையை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் நீண்டநாட்களாக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த சாலையை புதிதாக அமைக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து சாலை பெயர்த்து போடப்பட்டுள்ளது. மேலும் சாலை அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வழியாக கடந்த ஒரு மாதமாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுஉள்ளது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகவும், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களை இணைக்கும் சாலையாகவும் இருப்பதால் இதில் எந்த நேரமும் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். தற்போது இந்த சாலையில் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலையால் அரசு டவுன் பஸ் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுஉள்ளது.

இதனால் இப்பகுதியில் உள்ள நெய்வயல், நாச்சியேந்தல், அல்லிக்கோட்டை, அலங்கூரணி, துத்தாக்குடி, செகுடி, இளங்குன்றம், கண்ணன்புஞ்சை, திணைக்காத்தான்வயல், கீழக்கோட்டை, சீந்திவயல், ஓரிக்கோட்டை, டி.நாகனி, மாவிலங்கை, உள்பட சுமார் 50 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த சாலையை பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக தொடங்கவும், விரைவில் சாலை அமைக்கும் பணியை முடித்து வாகன போக்குவரத்தை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.


Next Story