ரேணிகுண்டா அருகே லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப சாவு


ரேணிகுண்டா அருகே லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 2 Dec 2018 10:55 PM GMT (Updated: 2 Dec 2018 10:55 PM GMT)

வெளிநாட்டில் இருந்து திரும்பியவரை வரவேற்று அழைத்து வந்த காரும், சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.

ஸ்ரீகாளஹஸ்தி,

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சிந்தகொம்மதின்னா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரம் (வயது 36). குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய கங்காதரத்தை அவருடைய குடும்பத்தினர் வரவேற்க சென்றிருந்தனர். பின்னர் அவருடன் காரில் தங்கள் கிராமத்துக்கு புறப்பட்டனர்.

அவர்களது கார் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா மண்டலம் மாமண்டூர் அருகே நேற்று முன்தினம் இரவு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே கடப்பாவில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த ஒரு லாரியும், இவர்கள் சென்ற காரும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. அதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காருக்குள் இருந்தவர்கள் படுகாயத்துடன் துடித்தனர். விபத்தால், அங்கு கடும் போக்குவரத்துப்பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும், ரேணிகுண்டா துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் சிவராமன், சப்-இன்ஸ்பெக்டர் இம்ரான்பாஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் காரில் பயணம் செய்த கங்காதரம், அவருடைய மனைவி விஜயம்மா (30), கங்காதரத்தின் தம்பி பிரசன்னா (32), அவருடைய மனைவி மாரியம்மாள் (25), இவர்களின் 2 வயது மகன் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களை பிணமாகத்தான் போலீசாரால் மீட்க முடிந்தது.

பின்னர் விபத்தில் பலியானவர்களின் உடல்களை போலீசார் திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி ரேணிகுண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story