கிருமாம்பாக்கத்தில் ரூ.87 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா பணிகளை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்
பாகூரை அடுத்த கிருமாம்பாக்கத்தில் ரூ.87 லட்சத்து 21 ஆயிரம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான பணியை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
பாகூர்,
புதுவை அரசு ஆதி திராவிடர் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் ஏம்பலம் தொகுதியில் ஆதி திராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் சிறுவர் பூங்கா, தார்சாலைகள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி கிருமாம்பாக்கம் கிராமத்தில் ரூ.87 லட்சத்து 21 ஆயிரத்தில் சிறுவர் பூங்காவும், தண்ணீர்தொட்டி வீதி மற்றும் பழைய தபால்நிலைய தெருவில் ரூ.26 லட்சத்து 44 ஆயிரத்தில் செலவில் தார்சாலை அமைக்கவும் திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த திட்டப்பணிகளின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 13 லட்சத்து 65 ஆயிரம் ஆகும்.
இந்த திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன், ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக செயற்பொறியாளர் ஏகாம்பரம், உதவி பொறியாளர் சாம்பசிவம், இளநிலை பொறியாளர் ஜெயமுகுந்தன், முத்தாலம்மன் கோவில் அறங்காவல் குழு தலைவர் செந்தில் குமார், கிருமாம்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் பாலமுரளி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.