கோவையில் அட்டகாசம் செய்யும்: காட்டு யானைகளை விரட்ட மேலும் ஒரு கும்கியை வரவழைக்க முடிவு - தலைமை வனபாதுகாவலர் தகவல்
கோவையில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து மேலும் ஒரு கும்கி யானை வரவழைக்கப்படும் என்று மண்டல தலைமை வன பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்சவா தெரிவித்து உள்ளார்.
கோவை,
கோவை தடாகம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த காட்டு யானைகளை விரட்டுவதற்காக ஆனைமலை மற்றும் முதுமலை பகுதியில் இருந்து மொத்தம் 4 கும்கிகள் வரவழைக்கப்பட்டன. இருப்பினும் காட்டு யானைகள் அட்டகாசம் குறையவில்லை. இதனால் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து காட்டுயானைகளை பிடிப்பது குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த வனத்துறையினர் முடிவு செய்தனர். இதன்படி வட கோவையில் உள்ள மண்டல தலைமை வன பாதுகாவலர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க வன விலங்கு ஆர்வலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் வன விலங்கு ஆர்வலர்கள் பங்கேற்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர், விவசாயிகள் மற்றும் வன விலங்கு ஆர்வலர்கள் இடையே தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்திற்கு கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்சவா தலைமை தாங்கினார். மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். இதில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் தீபக் ஸ்ரீவத்சவா நிருபர்களிடம் கூறியதாவது:-
தொண்டாமுத்தூர், தடாகம் பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. இதில் ஜான் என்கிற கும்கி யானை சில காரணங்களால் சாடிவயல் முகாமுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து காட்டு யானைகளை விரட்டுவதில் அனுபவம் வாய்ந்த வசீம் என்கிற கும்கியை வரவழைக்க முடிவு செய்து உள்ளோம். இந்த கும்கி மூலம் காட்டு யானைகளை விரட்டு வரும் 3 நாட்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பலன் கிடைக்காவிட்டால் மட்டுமே அட்டகாசம் செய்யும் 2 காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கந்தசாமி மற்றும் விவசாயிகள் கூறிய தாவது:-
காட்டு யானைகள் அட்டகாசத்தால் நாள்தோறும் ஏராளமான விவசாய பயிர்கள் சேதப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தென்னை மரங்களை அதிகளவு காட்டு யானைகள் நாசம் செய்கின்றன. அரசு தற்போது ஒரு தென்னை மரத்துக்கு ரூ.500 மட்டுமே இழப்பீடாக தருகிறது. எனவே காட்டு யானைகளால் சேதப்படுத்தப்படும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு தொகையை உயர்த்தி தர வேண்டும். மேலும் விவசாயிகள், அனைத்து துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கோவையில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வன ஆர்வலர்கள் கூறும்போது, காட்டு யானைகளால் சேதப்படுத்தப்படும் விவசாய பயிர்களுக்கு அரசு வழங்கும் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் நடவடிக்கையை கடைசி முயற்சியாகத்தான் வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இதற்கிடையில் கோவை அருகே அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை விரட்டுவதா? பிடிப்பதா? என்பது பற்றி முடிவு செய்ய காட்டு யானைகளை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பிரபல நிபுணர் அஜய் தேசாய் இன்று (திங்கட்கிழமை) பெங்களூருவில் இருந்து கோவை வருகிறார். அவர் வந்து வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து ஆய்வு நடத்திய பின்னர் காட்டு யானைகளை பிடிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story