இன்று முதல் ஒரு வாரத்திற்குள் ரே‌ஷன் கடைகளில் இருப்புள்ள அரிசி வினியோகம்; ஊழியர்கள் சங்க பொதுக்குழுவில் முடிவு


இன்று முதல் ஒரு வாரத்திற்குள் ரே‌ஷன் கடைகளில் இருப்புள்ள அரிசி வினியோகம்; ஊழியர்கள் சங்க பொதுக்குழுவில் முடிவு
x
தினத்தந்தி 3 Dec 2018 4:51 AM IST (Updated: 3 Dec 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

ரே‌ஷன் கடைகளில் இருப்பு வைத்துள்ள அரிசியை இன்று முதல் ஒரு வாரத்திற்குள் வினியோகம் செய்திட நியாய விலைக்கடை ஊழியர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி நியாய விலைக்கடை ஊழியர்கள் கூட்டுறவு நலச்சங்க பொதுக்குழு கூட்டம் மத்திய கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 384 ரே‌ஷன் கடைகளில் பணியாற்றும் 760 கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் கடந்த 16 மாதங்களாக சம்பளம் வழங்காததால் கடந்த 3.10.18 முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தால் இலவச அரிசியின் தரம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

தொடர் மழை காரணமாக அரிசி வீணாகும் வாய்ப்பு உள்ளதால், கடைசியாக கடந்த ஜூன் மாதம் வினியோகித்த அரிசி ஈரப்பதமாக இருப்பதாலும், அரிசியின் தரம் மேலும் கெடுவதை தடுக்கவும் 50 ரே‌ஷன் கடைகளில் இருப்பு வைத்துள்ள அரிசியை இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்குள் வினியோகம் செய்வது, புதுச்சேரி அரசு இலவச அரிசிக்கான தொகையை குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக வங்கியில் ஜூலை மாதம் முதல் செலுத்தி வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. எனவே நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களை அரசின் பிற துறைகளில் மாற்றம் செய்யவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story