சுரங்க விரிவாக்கத்திற்காக: என்.எல்.சி.க்கு நிலம் கொடுக்க மாட்டோம் - வடக்குவெள்ளூர் கிராம மக்கள் அறிவிப்பு


சுரங்க விரிவாக்கத்திற்காக: என்.எல்.சி.க்கு நிலம் கொடுக்க மாட்டோம் - வடக்குவெள்ளூர் கிராம மக்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2018 3:45 AM IST (Updated: 3 Dec 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

சுரங்க விரிவாக்கத்திற்காக என்.எல்.சி.க்கு நிலம் கொடுக்க மாட்டோம் என்று வடக்கு வெள்ளூர் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

மந்தாரக்குப்பம்,

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் நிலக்கரி, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சுரங்க விரிவாக்கத்திற்காக அப்பகுதியில் உள்ள நிலங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் கையகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சுரங்கம்-1 விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வடக்கு வெள்ளூர் கிராம பகுதியில் உள்ள நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் இதற்கு வடக்கு வெள்ளூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வடக்கு வெள்ளூர் கிராம மக்கள் நேற்று காலையில் மாரியம்மன் கோவிலில் ஒன்று திரண்டு ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் பா.ம.க.வினர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் கிராம மக்கள் கூறுகையில், எங்களது கிராம பகுதியில் உள்ள நிலத்தை 4-ந் தேதி(நாளை) மற்றும் 6-ந் தேதி என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக என்.எல்.சி. நிர்வாகம் இதுவரை எங்களிடம் கருத்து கேட்கவில்லை.

ஏற்கனவே என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான இழப்பீடு தொகை வழங்கவில்லை. மாற்று நிலம் கொடுத்த பகுதியிலும் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை என்.எல்.சி. நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் எங்களது கிராமத்தையும் கையகப்படுத்தப்போவதாக என்.எல்.சி. அறிவித்துள்ளது.

எங்களது கிராமத்தில் ஒரு செண்ட் நிலத்தை கூட என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம். மீறி நிலத்தை கையகப்படுத்தினால் பா.ம.க. கட்சியுடன் சேர்ந்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Next Story