சேலத்தில்: காவலர்களுக்கு பயிற்சி முகாம் - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


சேலத்தில்: காவலர்களுக்கு பயிற்சி முகாம் - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 Dec 2018 3:30 AM IST (Updated: 3 Dec 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான பயிற்சி முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் தொடங்கி வைத்தார்.

சேலம், 

சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படையில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 2-ம் நிலை காவலர் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் தலைமை தாங்கினார். ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான்சன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வரவேற்று பேசினார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

சட்டம், துப்பாக்கி சுடுதல், நீச்சல் பயிற்சி, யோகாசனம், கராத்தே, கமாண்டோ பயிற்சி, விரல் ரேகை பயிற்சி, நீதிமன்ற செயல்பாடுகள், சிறைத்துறை செயல்பாடுகள், உடற்கூறு ஆய்வு அறிதல் உள்ளிட்டவை குறித்து 7 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். 15 நாட்கள் ஆயுதப்படை பணி, 15 நாட்கள் காவல்நிலைய பணி ஒரு மாதம் வழங்கப்படும். ஒட்டு மொத்தமாக 8 மாதங்கள் உங்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் நல்ல புத்தகங்களை வாசிப்பதற்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள். வாசிப்பதால் மனது தெளிவடையும், பல உலகசெய்திகளை தெரிந்து கொள்ளலாம், சமுதாயத்தின் நிலையையும் அறிந்து கொள்ளலாம். காவல் பணிக்கு இது மிகவும் உதவும். நமது பயிற்சி பள்ளியின் நூலகத்தை நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இந்த பயிற்சி உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் வெற்றிகளை பெற்று தரும். மேலும் நீங்கள் அன்பு, கடமை, கண்ணியம், அடக்கம், வீரம், விவேகம், அச்சமின்றி உற்சாகத்துடன், நேர்மையுடன், நீதியுடன் பணியாற்ற எப்போதும் உங்களுக்கு துணை இருக்கும். நீங்கள் ஒவ்வொருவரும், நான் எதையும் சாதிக்க வல்லவன் என்பதில் முழுநம்பிக்கை வையுங்கள்.

மேலதிகாரிகளை மதித்தும் உடன் பணியாற்றுபவர்களை அரவணைத்தும், பொறுமையை கடைபிடித்து, கடமை ஒன்றையே கண்ணாக கருதி திறமைகளை முழுமையாக நல்ல வழியில் வெளிப்படுத்த வேண்டும். நேர்மையை மட்டுமே கையாண்டு சத்தியத்தின் பாதையில் நடங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் போலீசார், பயிற்சி காவலர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story