காரைக்காலில் சோகம்: மீன் பிடிக்கச் சென்று விட்டு திரும்பிய போது விசைப்படகு கடலில் கவிழ்ந்தது, 2 மீனவர்கள் மாயம்


காரைக்காலில் சோகம்: மீன் பிடிக்கச் சென்று விட்டு திரும்பிய போது விசைப்படகு கடலில் கவிழ்ந்தது, 2 மீனவர்கள் மாயம்
x
தினத்தந்தி 3 Dec 2018 5:35 AM IST (Updated: 3 Dec 2018 5:35 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று விட்டு திரும்பிய போது விசைப்படகு கவிழ்ந்ததால் கடலில் விழுந்து தத்தளித்த 11 மீனவர்கள் மீட்கப்பட்டனர். 2 மீனவர்கள் மாயமானார்கள்.

காரைக்கால்,

கஜா புயல் காரணமாக கடந்த மாதம் (நவம்பர்) 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன்பிறகு, புயலில் சேதமான படகிற்கு நிவாரணம் வழங்க கோரி, கடந்த 17-ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லவில்லை. சேதமான படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்ததைத் தொடர்ந்து கடந்த 30-ந் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்களில் காரைக்கால் கோட்டுச்சேரிமேட்டைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆரோக்கிய ராஜ், பிரதீப், கு.சுமன், வீ.சுமன், பன்னீர், சக்திவேல், சரவணன், பாஸ்கர், சிவகுமார், கணேசன், கோபால், நீலவண்ணன் என்கிற கிருஷ்ணசாமி, சந்தோஷ் ஆகிய 13 பேர் சென்றனர்.

கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று முன்தினம் மாலை அவர்கள் கரை திரும்ப தொடங்கினர். அப்போது காற்று பலமாக வீசியது. இதில், திடீரென விசைப் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. அதில் இருந்த 13 பேரும் கடலில் விழுந்து நீந்தியபடி தத்தளித்தனர்.

அப்போது அங்கு வந்த மற்றொரு மீன்பிடி படகில் அந்த மீனவர்கள் ஏறி உயிர் தப்பினர். ஆனால் கோட்டுச்சேரிமேட்டைச் சேர்ந்த நீலவண்ணன் என்ற கிருஷ்ணசாமி (வயது 48), நாகை தரங்கம்பாடி சின்னக்குடியைச் சேர்ந்த சந்தோஷ் (20) ஆகிய இரு மீனவர்களை மட்டும் காணவில்லை. மாயமான அவர்களை சக மீனவர்கள் இரவு முழுவதும் கடலில் தேடிப்பார்த்தனர்.

ஆனாலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் மற்ற 11 மீனவர்கள் கரை திரும்பினர். சம்பவம் குறித்து கோட்டுச்சேரிமேட்டை சேர்ந்த மீனவ கிராம பஞ்சாயத்தாரிடம் அவர்கள் தெரிவித்தனர். மீனவ பஞ்சாயத்தார் முதல்-அமைச்சர் நாராயணசாமி, கலெக்டர் கேசவன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்களது உத்தரவின்பேரில் காரைக்கால் மாவட்ட கடலோர காவல் போலீசார், இந்திய கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் விசைப்படகு கவிழ்ந்த கடல் பகுதியில் மாயமான மீனவர்களை தொடர்ந்து தேடினர். காணாமல் போன மீனவர்களின் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர், மீன்பிடி துறைமுகத்தில் கண்ணீர் சிந்தியபடி காத்திருக்கின்றனர்.

மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 2 பேர் கடலில் மாயமான சம்பவம் காரைக்காலில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story