ஊட்டியில் ரூ.3 கோடியில்: மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க 6 மையங்கள் - நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை


ஊட்டியில் ரூ.3 கோடியில்: மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க 6 மையங்கள் - நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Dec 2018 3:30 AM IST (Updated: 3 Dec 2018 5:55 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் ரூ.3 கோடியில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க 6 மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சுற்றுலா நகரமான ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் செயல்பட்டு வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் 35 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகிறார்கள். வீடுகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், கடைகளில் சேகரமாகும் காய்கறி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை நகராட்சி நிர்வாகம் சுகாதார பணியாளர்களை கொண்டு சேகரித்து வருகிறது.

ஊட்டி நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, வீடுகளில் சேகரமாகும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்கள் தனித்தனியாக பிரித்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு வரும் நகராட்சி வாகனத்தில் சுகாதார பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். மக்கள் வெளியில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி நகராட்சியில் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க, முக்கிய இடங்களில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக சுகாதார பணியாளர்களிடம் கொடுக்கின்றனர். ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி கழிவுகள், குப்பைகள் என தினமும் 9 டன்னுக்கு மேல் சேகரமாகிறது. இதில் காய்கறி கழிவுகளை கொண்டு ஊட்டி காந்தலில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை பிரித்தெடுத்து மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி நகராட்சி சார்பில், ஊட்டியில் ரூ.3 கோடி மதிப்பில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பதற்கு ஊட்டி காந்தல் முக்கோணம், குருசடி காலனி, ஓல்டு ஊட்டி உள்பட 6 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது 2 இடங்களில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மையத்தில் இருபுறங்களிலும் தலா 7 தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளது. ஒரு தொட்டியில் 4 டன் குப்பையை சேகரித்து உரமாக்கலாம். உரம் தயாரிக்கும் எந்திரத்தில் மக்கும் குப்பைகளை போட்டவுடன், அவை அரைத்து வெளியே வரும்.

அதனை தொட்டிகளில் நிரப்பி மக்கும் பணி நடைபெறும். ஜெர்மன் தொழில்நுட்பம் வாய்ந்த பாலிகார்பனேட் சீட் மேற்கூரையில் போடப்பட்டு உள்ளது. இது வெப்பநிலையை உள்பகுதியில் அதிகமாக ஈர்ப்பதால், குப்பைகள் எளிதில் மக்கிவிடும். பின்னர் நகராட்சி மூலம் உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த உரத்தை விவசாய விளைநிலங்களுக்கு பயன்படுத்தலாம். இந்த தகவலை நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story