ஆரணி அருகே மணல் கடத்தி வந்த டிராக்டர் மோதி வாலிபர் படுகாயம் பொதுமக்கள் சாலை மறியல்
ஆரணி அருகே மணல் கடத்தி வந்த டிராக்டர் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி,
ஆரணியை அடுத்த தச்சூர் பொன்னி நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 22). இவருக்கு சொந்தமான டிராக்டரில் நேற்று காலை ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் கடத்திக் கொண்டு தச்சூர் வழியாக ஆரணி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
தச்சூர் பஜார் பகுதியில் வந்தபோது எதிரே வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 21) என்பவர் மீது டிராக்டர் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் ஏழுமலை படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் டிராக்டரை விரட்டிச் சென்றுள்ளனர். மணலை ஒரு இடத்தில் கொட்டிவிட்டு டிராக்டரை வேறொரு இடத்தில் நிறுத்திவிட்டு சந்தோஷ் தப்பியோடி விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலையின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தச்சூரில் ஆரணி- தேவிகாபுரம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டிராக்டரை பறிமுதல் செய்து சந்தோசை கைது செய்கிறோம் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதைத்தொடர்ந்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை தேடி வருகின்றனர்.
சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story