வந்தவாசியில் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பெண்கள் மனு
வந்தவாசியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் பெண்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார்.
இதில் வந்தவாசி காட்டு நாயக்கன் தெருவை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வந்தவாசி காட்டு நாயக்கன் தெருவில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடைக்கு வரும் மதுபிரியர்களால் எங்களின் குழந்தைகள் கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
டாஸ்மாக் கடை சாலையின் அருகே இருப்பதால் அவர்கள் குடித்து விட்டு எங்களின் பிள்ளைகளை தகாத வார்த்தைகளால் பேசி, கிண்டல் செய்கின்றனர். இதனால் எங்கள் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், படிப்பும் பாதிக்கப்படுகிறது.
மேலும் இந்த பகுதியில் பெண்கள் நடமாட முடிய வில்லை. சாலையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த டாஸ்மாக் கடையை அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற கலெக்டர் கந்தசாமி, இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story