கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு


கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 4 Dec 2018 4:15 AM IST (Updated: 3 Dec 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரியை அடுத்த கே.பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் எங்கள் கிராமம் உள்ளது. இந்த ஊராட்சியில் தான் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அத்துடன் தனியார் கலைக்கல்லூரி ஒன்றும், இரண்டு தனியார் பள்ளிகளும், 3 அரசு பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.

மேலும் இங்கு முட்டை அடுக்கி வைக்கும்அட்டை தயார் செய்யும் தொழிற்சாலையும் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து செல்கின்றனர். இதே போல் தொழிற்சாலைக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், கே.பூசாரிப்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடு செய்யப்படுவதாக அறிகிறோம். அவ்வாறு டாஸ்மாக் கடையை திறந்தால் பள்ளி, கல்லூரி மாணவிகள், கிராம பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் ஊரில் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

எனவே, எங்கள் கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி டாஸ்மாக் கடையினை எங்கள் பகுதியில் திறக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story