திருச்செங்கோடு அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள உரக்கிடங்கை அகற்ற வேண்டும் கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை
திருச்செங்கோடு அருகே கொல்லப்பட்டியில் குடியிருப்பு பகுதியில் உள்ள உரக்கிடங்கை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அதில் திருச்செங்கோடு அருகே உள்ள கொல்லப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் உரக்கிடங்கை அகற்ற கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
திருச்செங்கோடு நகராட்சி 30-வது வார்டுக்கு உட்பட்டது கொல்லப்பட்டி. இங்குள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருக்கும் 3 ஆயிரத்து 500 வீடுகளில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 30 வருடங்களாக வசித்து வருகிறோம்.
இங்குள்ள மையப்பகுதியான சிறுவர் விளையாட்டு திடலுக்கு அருகே குப்பைகளை அரைத்து மறுசுழற்சி செய்து உரமாக்கும் பணிகளை திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது. இந்த உரக்கிடங்கை அமைக்க அப்பகுதி மக்களின் விருப்பத்தையோ, கருத்துக்களையோ அவர்கள் கேட்கவில்லை.
இத்தகைய பணிகளை நகராட்சி நிர்வாகம் அங்கு மேற்கொள்வதால் முதியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாய நிலை உருவாகி உள்ளது. அதேபோல் அந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, கிருமிகள் காற்றில் கலப்பதால் சுகாதாரம் இல்லாத காற்றை அப்பகுதி மக்கள் சுவாசிக்க வேண்டி உள்ளது. எனவே அந்த உரக்கிடங்கை அகற்றி, மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அதை வேறு இடத்திற்கு மாற்ற திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story