திண்டுக்கல் மாவட்டத்தில் புயல் பாதிப்பு: மத்திய குழு ஆய்வு செய்ய வேண்டும் - இ.பெரியசாமி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


திண்டுக்கல் மாவட்டத்தில் புயல் பாதிப்பு: மத்திய குழு ஆய்வு செய்ய வேண்டும் - இ.பெரியசாமி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Dec 2018 10:15 PM GMT (Updated: 3 Dec 2018 7:07 PM GMT)

‘கஜா’ புயல் தாக்கிய திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று இ.பெரியசாமி எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

திண்டுக்கல்,

தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமையில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில்குமார், ஆண்டிஅம்பலம் ஆகியோரும் உடன் வந்தனர்.

அவர்களுடன் வந்த விவசாயிகள் மக்காச்சோள பயிர்களை கையில் கொண்டு வந்திருந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சிலரை மட்டும் உள்ளே அனுமதித்தனர். இதனால் விவசாயிகள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிலர் உள்ளே சென்றனர். ஆனால் அவர்கள் கலெக்டரிடம் தான் மனு அளிப்போம் என்று கூறினர்.

இதையடுத்து சிறிது நேரம் கழித்து கலெக்டர் டி.ஜி.வினய் அங்கு வந்தார். அவரிடம், ‘கஜா’ புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். பின்னர் வெளியே வந்த இ.பெரியசாமி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

‘கஜா’ புயலால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மா, வாழை, தென்னை உள்பட பல்வேறு பயிர்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக ஆயிரக் கணக்கான ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. ‘கஜா’ புயலால் மக்காச்சோளம் சேதமடைந்திருந்த நிலையில், தற்போது படைப்புழுக்களால் பயிர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும்.

மேலும் காப்பீட்டு தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா நிலங்களில் சாய்ந்து கிடக்கும் மரங்களை, அரசு எந்திரங்கள் மூலம் அகற்ற வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்டம் முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டும். மேலும் அனைத்து கிராமங்களிலும் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்.

புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்தையும் பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். மத்திய குழுவினர் திண்டுக்கல் மாவட்டத்தையும் பார்வையிட்டு சேதத்தை கணக்கிட வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை போதாது. மத்திய அரசு நிவாரண தொகை கொடுக்கவில்லை என்றாலும், மாநில அரசு அந்த தொகையை உடனடியாக கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story