அதிராம்பட்டினம் பகுதியில் கஜா புயலால் பாதிப்பு: தங்குமிடம், உணவு இல்லாமல் தவிப்பதாக புகார்


அதிராம்பட்டினம் பகுதியில் கஜா புயலால் பாதிப்பு: தங்குமிடம், உணவு இல்லாமல் தவிப்பதாக புகார்
x
தினத்தந்தி 4 Dec 2018 4:30 AM IST (Updated: 4 Dec 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினம் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தங்குமிடம், உணவு இல்லாமல் தவிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டைகளை ஒப்படைப்பதற்காக தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் வந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதன்படி நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிலஅளவை உதவி இயக்குனர் ராஜகுமார் தலைமை தாங்கினார். இதில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காந்தி நகரை சேர்ந்த மீனவ கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் நிலஅளவை உதவி இயக்குனர் ராஜகுமாரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கஜா புயலால் எங்கள் கிராமத்தில் கடல்நீர் உட்புகுந்தது. இதில் படகுகளும், வலைகளும் கடுமையாக சேதம் அடைந்தன. சூறைக்காற்றால் வீடுகளும் சேதம் அடைந்தன. இதானல் எங்கள் கிராமமே நிலை குலைந்து உள்ளது. ஆனால் எங்கள் பகுதியில் நிவாரண முகாம்கள் எதுவும் இல்லை. அதிராம்பட்டினத்தில் உள்ள கடற்கரையோத்தில் உள்ள 4 கிராமங்களுக்கு ஒரு முகாம் உள்ளது. அதில் எங்களுக்கு அனுமதி கிடையாது.

ஆனால் புயலால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இதுவரை எந்த நிவாரண பொருட்களும் வழங்கப்படவில்லை. அனைத்து நிவாரணங்களும் பக்கத்து கிராமத்தில் உள்ள நிவாரண முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட எங்கள் பகுதிக்கு இதுவரை அதிகாரிகள் கூட வந்து பார்க்கவில்லை.

இதனால் நாங்கள் உணவு, தங்குமிடம் இல்லாமல் தவித்து வருகிறோம். 4 அல்லது 5 குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு இடத்தில் வசித்து வருகிறோம். எங்களின் வாழ்வாதாரமே படகுகள் தான். அதை இழந்து விட்டோம். எனவே எங்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்யும் வகையில் தங்குமிடம், உணவு, படகுகளுக்கு எற்பாடு செய்ய வேண்டும். ரேஷன் கடையில் 3 கிலோ அரிசி தான் வழங்கப்படுகிறது. 1 லிட்டர் மண்எண்ணெய்யும் ரூ.15 கொடுத்து தான் வாங்குகிறோம்.

எனவே எங்கள் பகுதியை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இல்லை என்றால் அனைத்து ரேஷன்கார்டுகள், வாக்காளர் அட்டை, அடையாள அட்டை ஆகியவற்றை அரசிடமே ஒப்படைக்க உள்ளோம். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

மனுமீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

தமிழக ஜனநாயக கட்சியினர் சார்பில் கொடுத்த மனுவில், “தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தஞ்சை மாநகரிலும், அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் மறைமுகமாகவும், நேரடியாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்கி நடுத்தர வர்க்கத்தினரும், கூலி தொழிலாளர்களும் ஏமாந்து வாழ்வாதாரத்தை தொலைத்து வருகிறார்கள்.

இதே போல் போதை பொருட்களான புகையிலை, பான்பராக், குட்கா, பான்மசலா போன்றவை தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்களை பல்வேறு வழிகளில் ஏமாற்றி அவர்களது உழைப்பை சுரண்டி வாழ்வாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும் இந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”என அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story