கோவை ராமநாதபுரத்தில்: சாக்கடையில் பிணமாக கிடந்த ஆண் சிசு - வீசியது யார்? போலீஸ் விசாரணை
கோவை ராமநாதபுரத்தில் சாக்கடையில் ஆண் சிசு பிணமாக கிடந்தது. அதை வீசியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிங்காநல்லூர்,
கோவை ராமநாதபுரம் பஜனை கோவில் அருகே பெருமாள் கோவில் மைதானம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஆண் சிசு தொப்புள் கொடியுடன் மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.
பின்னர் அவர்கள், அங்கு கிடந்த ஆண் சிசு உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த சிசு பிறந்து சில மணிநேரம்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதை சாக்கடை யில் வீசிச்சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது தெரியவில்லை. கள்ளக்காதலில் பிறந்ததால் சாக்கடையில் வீசப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறும்போது, ‘இந்த சிசு அதிகாலை நேரத்தில் சாக்கடையில் வீசப்பட்டு உள்ளது. எனவே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்’ என்றனர்.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-
சாக்கடையில் வீசப்பட்ட சிசு போதிய வளர்ச்சி இல்லை. கரு உருவாகி 5 மாதங்கள் தான் இருக்கும். கருவுற்றதும் குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்கள் மாத்திரை சாப்பிட்டு அந்த சிசுவை அழிப்பார்கள். சிசுவின் வளர்ச்சி அதிகமாகி இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்து விடுவார்கள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து சிசுவை அகற்றி இருந்தால் அதை வெளியே வீச வாய்ப்பு இல்லை.
சில நேரத்தில் கருவை அழிப்பதற்காக மாத்திரை சாப்பிட்டு வரும் கருவுற்ற பெண் கழிவறை செல்லும்போது அதிக அழுத்தம் காரணமாக வயிற்றுக்குள் இருக்கும் சிசு தானாகவே வெளியே வர வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு தானாக வெளியே வந்த சிசுவை சாக்கடையில் வீசி இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story