மாற்றுத்திறனாளிகளுக்கு: ரூ.9½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்


மாற்றுத்திறனாளிகளுக்கு: ரூ.9½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 3 Dec 2018 10:15 PM GMT (Updated: 3 Dec 2018 8:02 PM GMT)

ஊட்டியில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் தினவிழா ஊட்டி ஜெ.எஸ்.எஸ். கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் ரூ.9 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், சக்கர நாற்காலி, தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

கடந்த 1989-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைக்கப்பட்டு, மூன்று அதிகாரிகளை கொண்டு 10 திட்டங்கள் வகுக்கப்பட்டது. அதன் பின்னர் 1995-ம் ஆண்டு சமூக நலத்துறையில் இருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிரிந்து, 1996-ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனித்துறையாக இயங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு அலுவலகம் திறக்கப்பட்டு, அதிகாரிகள் பணிபுரிந்து வருகிறார்கள்.

2016-ம் ஆண்டு 44 திட்டங்கள் வகுக்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 816 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளதுடன், அவர்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று வருகின்றனர். தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம், குடும்ப நல ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. பெட்டிக்கடை வைக்க மாற்றுத்திறனாளிகள் அரசின் உதவித்தொகையை கேட்டு வருகின்றனர்.

விண்ணப்பித்த அனைவருக்கும் பெட்டிக்கடை வைக்க இடம் ஒதுக்க இயலாததால், மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து பதிவு செய்து தொழில் தொடங்கலாம். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவிகளை செய்து வருகிறது. கிராமப்பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் இருந்தால், அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் பதிவு செய்து அரசின் சலுகைகளை பெற கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரவிக்குமார், சமூக நலத் துறை அதிகாரி புஷ்பலதா, கல்லூரி முதல்வர் தனபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் தின விழா ஊட்டி காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Next Story