ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 3 Dec 2018 11:00 PM GMT (Updated: 3 Dec 2018 8:03 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி, அவர்களுக்கு அரசின் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ள திட்டங்கள், உதவிகள் குறித்து தெரிவித்து வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தி அறிவித்து உள்ளது. ஆவின் பார்லர் வைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்பணத்தில் ரூ.25 ஆயிரம் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடினாலும் கழிவுகளை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு ஆலை இயங்க வேண்டும் என்றால் அதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பிக்க வேண்டும். ஆனால் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, நியாயத்தை உணர்ந்து, போராட்டம் தொடங்கிய 40 நாட்களிலேயே ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்காமல் ஆலையை மூடிவிட்டோம். அதன்பிறகு மக்களிடம் போராட்டத்தை கைவிட பல்வேறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது போராட்டம் அமைதியாகத்தான் இருந்தது. சில சமூக விரோத அமைப்புகள் மக்களை திசை திருப்பி தவறான வழியில் தூண்டிவிட்டு, மக்களுக்கு தவறான வழிகாட்டியதால் கடந்த மே மாதம் 22-ந் தேதி விரும்பத்தகாத சம்பவம் நடந்தது. அதன்பிறகு அமைக்கப்பட்ட ஆணையத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நாங்கள் தவறுதலாக வழிநடத்தப்பட்டு விட்டோம் என்று கருத்து தெரிவித்தார்கள்.

அந்த சம்பவத்துக்கு பிறகு அரசின் அவசரகால நடவடிக்கையாக ஆலைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அங்கு தி.மு.க. ஆட்சியில் ஆலை விரிவாக்கத்துக்காக 245 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த ஆணையும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கனிமொழி எம்.பி, ஸ்டெர்லைட் பிரச்சினையில் அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று குறிப்பிட்டு உள்ளார். இரட்டை வேடம் போடுவது தி.மு.க.தான். ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில் தான். அதன்பிறகு விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கியதும் தி.மு.க. தான். ஆலை தொடங்கும் போது அதற்கு எதிர்ப்பாக அ.தி.மு.க. இருந்தது. ஆகையால் இரட்டை வேடம் போடுகிறவர்கள் யார்? என்பது மக்களுக்கு தெரியும்.

மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க கருத்து சுதந்திரம் இருக்கிறது. மக்கள் கடந்த முறை அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தோம். அவர்களுக்கு பாதுகாப்பை அரசு வழங்கியது. அமைதியாக போராட்டம் நடக்கும் வரை அவர்களுக்கு அனைத்து அனுமதியும் வழங்கினோம். போராட வேண்டாம், மக்களின் உணர்வுகளை தெரிவிக்க வேண்டாம் என்று அரசு கூறவில்லை. அவர்களின் கோரிக்கையை ஏற்றதால்தான் ஆலை மூடப்பட்டது. அந்த வகையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது. மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இதுகுறித்து முதல்-அமைச்சர் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story