புயல் பாதிப்பால் பொங்கலுக்காக தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் மண் பானைகள் சேதம் தொழிலாளர்கள் கவலை


புயல் பாதிப்பால் பொங்கலுக்காக தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் மண் பானைகள் சேதம் தொழிலாளர்கள் கவலை
x
தினத்தந்தி 4 Dec 2018 4:15 AM IST (Updated: 4 Dec 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

நெடுவாசல் கிராமத்தில் பொங்கலுக்காக தயாரிக்கப்பட்ட மண் பானைகள், அடுப்புகள் கஜா புயலுடன் பெய்த மழையில் சேதமடைந்ததால் தொழிலாளர்கள் கவலையுடன் உள்ளனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், நெடுவாசல், மழையூர் மற்றும் பல கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானைகள், அடுப்புகள் செய்து வருகின்றனர். சில மாதங்களில் கிராம கோவில்களுக்கு மண் குதிரை சிலைகள் மற்றும் சுவாமி சிலைகளையும் செய்து வருகின்றனர். தற்போது சில்வர் மற்றும் அலுமினியம் போன்ற பாத்திரங்களின் வருகையால் மண் பானைகள் தேவை குறைந்துவிட்டது. ஆனால் தை பொங்கலுக்கு மண் பானையில் பொங்கல் வைக்கும் கலாசாரம் இன்றளவும் உள்ளது.

பொங்கல் பானைகள் தை மாதம் தேவை என்றாலும், அதற்கான தயாரிப்பு என்பது ஆடி மாதத்திலேயே தொடங்கி விடுகிறது. 6 மாதங்கள் தொடர்ந்து செய்யப்படும் பானைகளே தை பொங்கலுக்கு மக்கள் வாங்கி செல்கின்றனர். எதிர் வரும் தை திருநாளுக்காகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் செய்து வைத்திருந்த பொங்கல் பானைகள், அடுப்புகளை கஜா புயல், மழை சிதைத்துவிட்டது. அதனால் இந்த ஆண்டும் பொங்கல் பானைகள் பற்றாக்குறையும், விலை ஏற்றமும் காணப்படலாம்.

இதுகுறித்து நெடுவாசல் மண்பாண்ட தொழிலாளிகள் கூறுகையில், நெடுவாசல் மற்றும் அதனை ஓட்டியுள்ள நல்லாண்டார்கொல்லை கிராமத்தில் மட்டும் சுமார் 60 குடும்பங்கள் மண்பாண்டம் செய்யும் தொழில் செய்து வருகிறோம். நவீன பாத்திரங்களின் வருகையால் எங்கள் தொழில் நலிவடைந்து போனது. அதைவிட மண் கிடைப்பதும் சிரமமாக உள்ளது. ஒரு யூனிட் களிமண் கொண்டு வர ரூ.8 ஆயிரம் செலவாகிறது. அதற்கு பிறகு மண்ணை காயவைத்து பொடியாக இடித்து தண்ணீரில் கலக்கி சல்லடையில் சளித்து பிறகு சிலவற்றை கலந்துதான் பானைகள் செய்ய வேண்டும். அப்படி தான் இந்த ஆடி மாதம் முதல் செய்யப்பட்ட பொங்கல் பானைகள் சுடாமல் வீட்டிற்குள் வைத்திருந்தோம். கஜா புயல் மழையில் எங்கள் வீடுகள் சேதமடைந்து அத்தனை பானைகளும், அடுப்புகளும் சேதமானது. இதனால் எங்களுடைய 5 மாத உழைப்பும் மண் வாங்கிய செலவும் வீணாகிவிட்டது.

நெடுவாசல் பகுதியில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பொங்கல் பானைகள் கஜா புயலால் சேதம் அடைந்தது. இனிமேல் நாங்கள் அவ்வளவு பானைகளை செய்து சுடமுடியாது. அதனால் அழிந்த மண்பானைகளுக்கும் உடைந்த வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் கதர் வாரியத்தில் நாங்கள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்வதுடன் நவீன கருவிகளை இலவசமாக வழங்க வேண்டும். அப்போது தான் மண்பாண்ட தொழிலாளர்கள் மீண்டு எழ முடியும் என்றனர். 

Next Story