மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 4 Dec 2018 4:00 AM IST (Updated: 4 Dec 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும் என நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

மணிமுத்தாறு பிரதான கால்வாய் பாசனம் 3-வது, 4-வது ரீச் நீரினைப்பயன்படுத்துவோர் சங்கத்தினர் தலைவர் காசிஆனந்தன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, மணிமுத்தாறு அணையில் இருந்து 3-வது, 4-வது ரீச் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் தீக்குளிப்போம் என்று விவசாயிகள் கூறினார்.

பின்னர் கலெக்டரிடம், விவசாயிகள் கொடுத்த மனுவில், மணிமுத்தாறு அணையின் 3-வது 4-வது ரீச்சில் உள்ள கால்வாய் பாசன குளங்களில் தற்போது தண்ணீர் இல்லை. ஆனால் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று நினைத்து விவசாயிகள் 2 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிரிட்டு உள்ளனர். 40 நாள் பயிராக உள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் தண்ணீர் திறந்து விடப்படவில்லை என்றால் பயிர்கள் கருகும் நிலை ஏற்படும். கடந்த ஆண்டு சுழற்சி முறையில் 1-வது, 2-வது ரீச்சில் உள்ள கால்வாய் பாசன குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த ஆண்டு சுழற்சி முறையில் 3-வது, 4-வது ரீச்சில் உள்ள கால்வாய் பாசன குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும். எனவே பயிர்களை காப்பாற்ற உடனடியாக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதேபோல் எம்.எல்.தேரி விவசாயிகள் மேம்பாட்டு சங்கத்தினர் கொடுத்த மனுவில், நெல்லை மாவட்டத்தின் வறட்சியான பகுதியான திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக சிறப்பு ஆணை மூலம் மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச்சின் 10-வது மடையின் சுவிஷேசபுரம் உள்ளிட்ட குளங்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கூறி உள்ளனர்.

பாரதீய ஜனதா கட்சியினர் மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்செல்வன் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, நெல்லை சுத்தமல்லி கோடகன்கால்வாயில் புதிதாக கட்டிய மடைகளில் ஷட்டர் போட வேண்டும். 63-வது மடையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பை சரிசெய்யவேண்டும் என்று மனு கொடுத்தனர்.

கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்த ஜமீன் வாரிசு இசக்கிப்பாண்டியன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சொக்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமான போகநல்லூர் கிராமத்தில் பழமையான மண்கோட்டை, கற்சிலைகள், கல்வெட்டு இருந்தன. இதை அழித்துவிட்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், மின்சார நிலையம் அமைக்கவும் அரசு அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள். எனவே வரலாற்று சின்னத்தை அழித்துவிட்டு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதையும், மின்சார நிலையம் அமைப்பதையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

தமிழ்நாடு வண்ணார்சலவை தொழிலாளர் முன்னேற்ற பேரவையினர், கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, நெல்லை சங்குமுத்தம்மாள்புரத்தில் பல வருடங்களாக வசித்து வருகின்ற குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை வழங்கவேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ராமையன்பட்டி பஞ்சாயத்து அரசு புதுக்காலனி, சிவாஜிநகர் பகுதி தெருக்களில் சேறும் சகதியுமாக கிடப்பதை அகற்றக்கோரியும், சாலை வசதி செய்து தரவேண்டும் என்று கூறியும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ராமையன்பட்டி யாதவர் அரிஜன தெரு மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தங்கள் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறு மனு கொடுத்தனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் உப்பளவு பகுதி விவசாயிகள், மக்காசோள பயிருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து படைப்புழு தாக்குதலில் சேதம் அடைந்த மக்காச்சோளத்திற்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று மனு கொடுத்தனர். சங்கரன்கோவில் அருகே வடக்குப்புதூர் பகுதி மக்கள், தங்கள் பகுதியில் கல்குவாரி அமைக்கக்கூடாது என்று கூறி மனு கொடுத்தனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராம மக்கள் புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் இன்பராஜ், ஊர்தலைவர் மாடசாமி ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், நடுவக்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும். சுடுகாட்டிற்கு தனிப்பாதை அமைத்து தரவேண்டும் என்று கூறி உள்ளனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், குடும்பர், பண்ணாடி, காலடி, கடையன், தேவேந்திரகுலத்தான், வாதியான், பள்ளர் ஆகிய உட்பிரிவுகளாக உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story