மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
நெல்லையில் நடந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்ட் வரவேற்று பேசினார்.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாநிலம் முழுவதும் இன்று (அதாவது நேற்று) அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளை ஊனமுற்றவர்கள் என்று புறம் தள்ளாமல், அவர்களும் நம்மில் ஒருவர் என நினைக்க வேண்டும்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அந்த திட்டங்களை இந்த அரசு செய்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்திறமை உள்ளது. அவர்கள் திறமைகளை வெளிஉலகத்துக்கு கொண்டுவர வேண்டும். இங்கு வந்து இருக்கும் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களையும் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதாபரமசிவம், நெல்லை புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல் ஜெபராஜன், கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானி பண்டாரம், நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் குருமூர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி, வீரவநல்லூர் மயோபதி காப்பக நிர்வாகி ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசால் வழங்கப்பட்ட 3 சக்கர மோட்டார்சைக்கிள்களுடன் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடந்தது. பேரணியை கலெக்டர் ஷில்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகள் சார்ந்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதை கலெக்டர் ஷில்பா திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில், மாற்றுத்திறனாளிகள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story