முதலிபாளையத்தில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை


முதலிபாளையத்தில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Dec 2018 4:00 AM IST (Updated: 4 Dec 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

முதலிபாளையத்தில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது தள்ளுவண்டி வியாபாரிகள் சிலர் கொடுத்த மனுவில் “திருப்பூர் பழைய பஸ் நிலையம் உள்ளே கடந்த 20 ஆண்டுகளாக மலிவு விலையிலும், தள்ளுவண்டியிலும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் வண்டிகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.

மத்திய அரசின் சாலையோர வியாபாரிகளுக்கான தேசிய கொள்கைப்படி மாநகராட்சி நிர்வாகம் சாலையோரத்தில் வியாபாரம் செய்கிறவர்களுக்கான அடையாள அட்டை வழங்கி உள்ளது. தற்போது கடந்த 2 மாதங்களாக போலீசார் வியாபாரம் செய்ய விடாமல் அப்புறப்படுத்திவிட்டார்கள். இதனால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறோம்.

எனவே போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் இல்லாமல் பழைய பஸ் நிலையத்திற்கு உள்ளே தள்ளுவண்டி வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகத்தினர் கொடுத்த மனுவில் “இந்து முன்னணி அமைப்பினர் வருகிற 23, 24, 25 ஆகிய தேதிகளில் பொங்கலூரில் மகா யாகம் என்ற நிகழ்வை நடத்த இருக்கிறார்கள். அதற்கு பரப்புரை செய்வதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ஒரு ரதத்தில் சென்று, இந்து மாணவ-மாணவிகள் செங்கல் மற்றும் நெய் போன்ற பொருட்களை கொடுத்து, யாகத்தில் கலந்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். எனவே பள்ளிகளில் பரப்புரை செய்வதை தடுக்க வேண்டும்” என்றிருந்தனர்.

முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில் “ எங்களது பகுதியில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2, 3 நாட்களில் குடிநீரில் புழு உருவாகி விடுகிறது. இந்த குடிநீர் மிகவும் அழுக்காக இருந்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு காய்ச்சல்கள் பரவி வந்து கொண்டிருக்கிறது. எனவே சுகாதாரமான குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும்” என்றிருந்தனர்.

தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில் “பல்லடம் வட்டம் நாரணாபுரம் கல்லம்பாளையம் பகுதியில் 25 ஏழை தொழிலாளர்களுக்கு இலவச பட்டா திட்டத்தின் கீழ் 2 சென்ட் காலி இடம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகள் மீது தனிக்கவனம் மேற்கொள்ள வேண்டும்” என்றிருந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில் “ பல்லடம் வட்டம் அறிவொளிநகர் அடுக்குமாடி குடியிருப்பில் 256 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டது. அதில் 2015-ம் ஆண்டின் முதல் மக்கள் ஜனத்தொகை கணக்கின்படி 2 ஆயிரம் பேர் கூடுதலாகியுள்ளனர்.

ஆனால் அதற்கேற்றபடி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அடிப்படை வசதிகளை சீர் செய்ய வேண்டும். சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

Next Story