பறவைகளால் நெற்பயிர்கள் சேதம் வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மானமாமதுரை வட்டாரத்தில் பறவைகளால் நெற்பயிர்கள் சேதமடைந்து வருவதால், வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரை வட்டாரத்தில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் பாசன விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். வேதியரேந்தல், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதிய ரகமான கோ 51 பயிரிட்டுள்ளனர். நான்கு மாத பயிரிரான இந்த வகை தற்போது விளைச்சல் கண்டுள்ளது.
இந்தநிலையில் பகல் முழுவதும் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து நெற்பயிர்களை சேதப்படுத்துகின்றன. விளைந்த நெற்கதிர்களை கொத்தி கீழே போட்டு விடுகின்றன. வெடி வெடித்தாலும் சிறிது நேரம் கழித்து மீண்டும் கூட்டம் கூட்டமாக வந்து விடுகின்றன. விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்தாலும் பறவைகளை விரட்ட முடியவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் மயில்களும் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:– ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை செலவு செய்து போதிய விளைச்சல் கண்டும் பறவைகளை விரட்ட முடியாமல் தவித்து வருகிறோம். பகல் முழுவதும் குருவி, மைனா மாலை மற்றும் காலை நேரங்களில் மயில்கள் என விவசாயமே செய்ய முடியவில்லை. கடந்த 3 மாதங்கள் இரவு பகலாக தண்ணீர் பாய்ச்சி விளைவித்த நெற்கதிர்களை பறவைகள் சேதப்படுத்தி விட்டு போய்விடுகின்றன.
இதனால் நிலங்களை குத்தகைக்கு வாங்கி நெல் பயிரிட்டதில், தற்போது ஏக்கருக்கு லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பயிர்களை சேதப்படுத்தும் பறவைகளை பிடித்தால் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கின்றனர். இதனால் விவசாயகள் பலரும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். எனவே பறவைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
வி.சிதம்பரம், செய்தியாளர் மானாமதுரை சிவகங்கை மாவட்டம் செல் 9944184233