புதிய அணை கட்டும் திட்டம் மேகதாதுவில் 7-ந்தேதி நேரில் ஆய்வு நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


புதிய அணை கட்டும் திட்டம் மேகதாதுவில் 7-ந்தேதி நேரில் ஆய்வு நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 3 Dec 2018 10:53 PM GMT (Updated: 3 Dec 2018 10:53 PM GMT)

மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற 7-ந் தேதி மேகதாதுவில் நேரில் ஆய்வு செய்ய இருப்பதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இ்தற்கான திட்ட அறிக்கையை நாங்கள் ஏற்கனவே தயாரித்துவிட்டோம். வருகிற 7-ந் தேதி காலை மேகதாது பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளோம்.

எங்களுடன் வனத்துறை அதிகாரிகள் மற்றும் பிற துறைகளின் நிபுணர்கள் வருகிறார்கள். திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். மேகதாதுவில் அணை கட்டுவதால் 95 சதவீதம் தமிழகத்திற்கு தான் பயன். இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் நீர்ப்பாசனத்திற்கு அனுமதி இல்லை. ஒரு ஏக்கர் நிலத்திற்கு கூட நீர் வழங்க இயலாது. இதுபற்றி தமிழகத்திற்கு எடுத்து கூறி புரிய வைக்க வேண்டும்.

மேகதாதுவை தொடர்ந்து சிவனசமுத்திரத்திற்கு செல்கிறோம். அதன் பிறகு மைசூருக்கு சென்று தங்குகிறோம். கே.ஆர்.எஸ். அணை பகுதியில் 296 ஏக்கரில் காவிரி தாய்க்கு சிலை அமைக்க முடிவு செய்துள்ளோம். அங்கு பூங்கா, அருங்காட்சியகம் போன்றவை அமைக்கப்படுகிறது.

அரசு-தனியார் பங்களிப்பில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் அமையவுள்ள இடத்தை நேரில் பார்வையிடுகிறோம். அன்றைய தினம் மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி மற்றும் எம்.எல்.ஏ.க்களை அங்கு இருக்குமாறு கூறி இருக்கிறோம்.

இந்த திட்டத்தை அமல்படுத்த ஒரு குழுவை அமைக்க உள்ளோம். இந்த குழுவில் மைசூரு மன்னரும் இடம் பெறுவார். நல்ல பணிகளை செய்யும்போது, விமர்சனங்கள் வருவது இயல்பானது தான். ஆபரேஷன் தாமரை உரையாடல் பதிவு வெளியாகியுள்ளது. எனது பெயரை பயன்படுத்தினால் எனக்கு தான் விளம்பரம் அதிகமாக கிடைக்கிறது. இதில் நான் ஒன்றும் செய்ய முடியாது.

நான், கட்சியின் சாதாரண தொண்டன். கட்சி என்ன சொல்கிறதோ அதை செய்கிறேன். சதீஸ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியாது. என்னை சந்திக்க எடியூரப்பா வந்தார். அவரை வரவேற்று சந்தித்து பேசினேன். அப்போது அவர் சிவமொக்காவில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரினார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அரசிடம் நிதி இல்லை என்பது இதற்கு அர்த்தம் இல்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்திருக்கிறது. நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள குமாரசாமி இதை சரிசெய்வார்.

மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. நோட்டீஸ் வந்த பிறகு என்ன கூறி இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம். இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story