‘தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது’ - கடலூரில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி
காய்ச்சலை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையினால் தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது என்று கடலூரில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறினார்.
கடலூர்,
கடலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நேற்று மாலை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்தார். அப்போது மருத்துவமனையில் உள்ள டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை வார்டில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் காய்ச்சல் அதிகரித்து காணப்பட்டது. இதை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் 35 சதவீதம் உள்நோயாளிகள் உள்ளனர்.
கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 564 பேர் உள்நோயாளிகளாக இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 260 ஆக குறைந்துள்ளது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை 146-ல் இருந்து 65 ஆக குறைந்துள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது
டாக்டர்கள் போராட்டம்
தமிழ்நாட்டில் டெங்கு, பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 23 ஆயிரத்து 294 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 65 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 3,845 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 13 பேர் இறந்துள்ளனர்.
அதேபோல் கடந்த ஆண்டு 3,800 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 17 பேர் இறந்தனர். இந்த ஆண்டு 2,100 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இதுவரை 37 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் இறப்பு குறைந்துள்ளது, பன்றி காய்ச்சல் இறப்பு அதிகரித்துள்ளது. கோவையை ஒட்டியுள்ள பகுதிகளில் பன்றி காய்ச்சல் பாதிப்பை தடுக்க கூடுதலாக கண்காணிக்க வேண்டி உள்ளது.
பொதுவாக நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு குறைந்துள்ளது. மேலும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் நிலைமையும் 40 சதவீதம் குறைந்துள்ளது.
அரசு டாக்டர்களின் போராட்டம் தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம். ஆனால் இந்த கால கட்டத்தில் சுகாதார பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்பட கூடாது, எழை, எளிய மக்களை கைவிடக்கூடாது. அவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன்.
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 12 ஆயிரத்து 436 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஆண், பெண் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருந்த பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. தற்போது திருவண்ணாமலை மாவட்டம் தான் சவாலாக இருக்கிறது. பாலின விகிதத்தை அதிகரிக்க சட்டம் மற்றும் விழிப்புணர்வு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், சப்-கலெக்டர் சரயூ, நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கலா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஹபீசா, செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், சுகாதார திட்ட அலுவலர் டாக்டர் பரிமேலழகர் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story