நெய்வேலி அருகே: டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் - திறக்கக்கோரி மதுபிரியர்கள் திரண்டதால் பரபரப்பு


நெய்வேலி அருகே: டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் - திறக்கக்கோரி மதுபிரியர்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Dec 2018 9:45 PM GMT (Updated: 3 Dec 2018 11:01 PM GMT)

நெய்வேலி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தினர். டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி மதுபிரியர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்கு வெள்ளூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அருகில் உள்ள விளைநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் வடக்கு வெள்ளூர், ரோமாபுரி, பூனங்குறிச்சி ஆகிய கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து, டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இந்த டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடலூரில் இருந்து லாரியில் மதுபாட்டில்கள் கொண்டுசெல்லப்பட்டு, வடக்கு வெள்ளூரில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் இறக்கி வைக்கப்பட்டது. நேற்று காலையில் மதுபாட்டில்கள் அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மதியம் 12 மணி அளவில் அந்த டாஸ்மாக் கடையை திறந்து விற்பனை செய்ய அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் அங்கு வந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் வடக்கு வெள்ளூர், ரோமாபுரி, பூனங்குறிச்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் வந்து, டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதனிடையே 3 கிராமங்களை சேர்ந்த மதுபிரியர்களும், டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். அவர்கள், டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி கோஷமிட்டனர். இது பற்றி அறிந்ததும் மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாள், சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெண்கள் கூறுகையில், இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். மேலும் மதுபிரியர்களுக்கு போதை தலைக்கேறியதும் அவ்வழியாக செல்பவர்களுடன் தகராறு செய்யும் நிலை உருவாகும். அதனால் எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்றனர்.

மதுபிரியர்கள் கூறுகையில், நாங்கள் அனைவரும் தினக்கூலியாளர்கள். நாள் ஒன்றுக்கு ரூ.350-க்கு வேலை செய்கிறோம். உடல் அசதிக்காக மதுகுடிக்கிறோம். இதற்காக 9 கிலோ மீட்டர் தொலைவில் நெய்வேலி 28-வது வட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கும், 10 கிலோ மீட்டர் தொலைவில் அரசக்குழியில் உள்ள டாஸ்மாக் கடைக்கும் சென்று மது குடித்துவிட்டு வருகிறோம். அவ்வாறு செல்வதால் பணம் விரயமாவதுடன், வரும் வழியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் நன்றாக இருக்கும் என்றனர்.

இருதரப்பு கோரிக்கையையும் கேட்ட போலீசார், இன்று(அதாவது நேற்று) டாஸ்மாக் கடை திறக்கப்படாது. அனைவரும் கலைந்து செல்லுங்கள். இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் மனு கொடுங்கள் என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story