சேத்தியாத்தோப்பு அருகே: அழுகிய நிலையில் வாலிபர் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
சேத்தியாத்தோப்பு அருகே அழுகிய நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வலசக்காடு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடல் நிர்வாண நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுபற்றி சோழத்தரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இதையடுத்து இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? அவரை யாரேனும் அடித்துக்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வயல்வெளியில் அழுகிய நிலையில் ஆண் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story