சேத்தியாத்தோப்பு அருகே: கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட 38 பக்தர்களுக்கு வாந்தி-மயக்கம்
சேத்தியாத்தோப்பு அருகே கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட 38 பக்தர்களுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.
சேத்தியாத்தோப்பு,
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குமாரக்குடி கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இதையொட்டி அங்குள்ள மாரியம்மன் கோவிலில் அய்யப்பன் படத்தை வைத்து பக்தர்கள் தினமும் பூஜை செய்து, பஜனை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு கோவிலில் பஜனை மற்றும் பூஜை நடைபெற்றது. இதையடுத்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட மதியழகன் மகள் கீர்த்தனா (வயது 7), முருகவேல் மகள் பிரதீஷா(5), ராஜதுரை மகன் ராஜ்குமார்(10), ராஜேந்திரன் மகன் தினேஷ்(10), கோதண்டம் மகன் மகேஷ்(11), கொளஞ்சி மகன் ராமர்(19), ராமமூர்த்தி மகன் ராஜேஷ்(19) உள்பட 38 பேருக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து வாந்தி- மயக்கம் ஏற்பட்ட 38 பேரையும் அவர்களது உறவினர்கள் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story