சேலத்தாம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு


சேலத்தாம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 3 Dec 2018 10:00 PM GMT (Updated: 4 Dec 2018 12:04 AM GMT)

சேலத்தாம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் ரோகிணியிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

சேலம், 

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிலர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.

இதனால் போலீசாருக்கும், பொதுமக்களும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சிலரை மட்டுமே மனு கொடுக்க உள்ளே அனுமதித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் ரோகிணியிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், சேலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது சேலத்தாம்பட்டி ஏரி பகுதி. 7 ஊர்களின் தண்ணீர் தேவையை இந்த ஏரிதான் பூர்த்தி செய்கிறது. ஏரி பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் சுமார் ரூ.42 கோடியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது.

ஏரிக்குள் அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதால் சென்னை மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது போல் இங்கும் நடக்க வாய்ப்புள்ளது. கோர்ட்டு உத்தரவுகளும் நீர்நிலைகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட கூடாது என்ற சூழ்நிலையில், சேலத்தாம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது. இது குறித்து மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் பரிசீலனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

சேலத்தாம்பட்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கடந்த 1999-2000-ம் ஆண்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. சேலம் திருமணிமுத்தாறு மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் எங்களுக்கு அந்த குடியிருப்பில் வீடுகள் வழங்கப்பட்டன. அங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. கடந்த 19 ஆண்டுகளாக நாங்கள் திறந்த வெளியில்தான் மலம் கழித்து வருகின்றோம். கொசுக்கள் அதிக அளவில் உள்ளதால் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளோம். குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் மீண்டும் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட புதிய குடியிருப்பு கட்ட பணிகள் நடந்து வருகிறது. எங்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை. அதற்குள் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டினால், எங்களது குடியிருப்பு இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் நீராதாரமாக உள்ள ஏரியில் கட்டினால் தண்ணீர் பிரச்சினை ஏற்படுவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே எங்களுக்கு மாற்று வீடுகள் கட்டிதரவும், எங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story