கடலூர் மாவட்டத்தில்: அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் வேலைநிறுத்தம் - நோயாளிகள் கடும் அவதி


கடலூர் மாவட்டத்தில்: அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் வேலைநிறுத்தம் - நோயாளிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 5 Dec 2018 3:30 AM IST (Updated: 5 Dec 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிகிச்சை பெற முடியாமல் புறநோயாளிகள் அவதி அடைந்தனர்.

கடலூர்,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தமிழ்நாடு அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி நேற்று கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, பெண்ணாடம், குறிஞ்சிப்பாடி என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர் கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிகிச்சை பெறவந்த புறநோயா ளிகள் அவதியடைந் தனர்.

கடலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்தனர். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர்.

சிலர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்ததால் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் நோயாளிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஹபீசா, மற்றும் சில பயிற்சி டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பி சென்றனர். மேலும் சிகிச்சை பெறவந்த புறநோயாளிகளை வாசலிலேயே காவலர்கள் மறித்து, டாக்டர்கள் வேலை நிறுத்ததால் சிகிச்சை அளிக்கப்படாது என்று கூறினர். இதனால் புறநோயாளிகள் சிலர் மருத்துவமனைக்குள் வராமலேயே திரும்பிச்சென்றனர். இதனால் பல்வேறு பிரிவுகள் நோயாளிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. போராட்டம் குறித்து அனைத்து அரசு மதுத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீதரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய அளவில் சுகாதாரத்துறையில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. மேலும் பல்வேறு விருதுகளும் பெறப்பட்டுள்ளது. இதற்கு அரசு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள்தான் காரணம். ஆனால் நாங்கள் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால்தான் இன்று (நேற்று) புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம். கடலூர் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எனவே எங்களது கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 12-ந் தேதி மீண்டும் புறநோயாளிகளுக்கான சிகிச்சையை புறக்கணித்து போராட்டமும், 13-ந் தேதி ஒட்டு மொத்த சிகிச்சை பிரிவையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளோம் எனறார். அப்போது டாக்டர்கள் சத்தியமூர்த்தி, பாலகுமரன், மணிமாறன், மதன்குமார், சரவணன், சசிகுமார் ஆகியோர் உடன்இருந்தனர்.

Next Story