பள்ளி, கல்லூரிகள் முன்பு நின்று மாணவிகளை கேலி செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை - போலீஸ் அதிகாரி எச்சரிக்கை


பள்ளி, கல்லூரிகள் முன்பு நின்று மாணவிகளை கேலி செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை - போலீஸ் அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 Dec 2018 3:30 AM IST (Updated: 5 Dec 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரிகள் முன்பு நின்று மாணவிகளை கேலி செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

கடலூர், 

கடலூர் புதுநகர் மற்றும் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பாதுகாப்பு, ஒழுக்கம், சாலை போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல் போன்றவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் பீச்ரோட்டில் உள்ள ஓட்டலில் நடந்தது.

கூட்டத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் கவியரசன், சுதாகர், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 25 பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அப்படி கண்காணித்தால் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள். அவர்களுக்கு செல்போன் வாங்கி கொடுக்க வேண்டாம். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மாணவர்களை வாகனங்களை இயக்க விடக்கூடாது. உரிமம் பெற்ற கல்லூரி மாணவர்களும் இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்யக்கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றச்செயல்களை தடுக்க பள்ளி, கல்லூரிகள் முன்பு கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமராவை பார்த்தாலே மாணவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க அவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்த வேண்டும், மாணவர்களிடம் சகோதரத்துவத்தை உருவாக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகளை தலைமை ஆசிரியர்களுக்கு போலீசார் வழங்கினர்.

முன்னதாக கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதாவது தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகள் முன்பு இளைஞர்கள் சிலர் நின்று மாணவிகளை கேலி, கிண்டல் செய்கிறார்கள். இதுபோன்ற செயலில் ஈடுபடும் இளைஞர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகள் வழியாக போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும் என்றனர். அதற்கு இன்ஸ்பெக்டர் சரவணன், உங்களது கோரிக்கையை ஏற்று, தினமும் பள்ளி, கல்லூரிகள் முன்பு ரோந்து மேற்கொள்கிறோம். அந்த சமயத்தில் மாணவிகளை கேலி செய்யும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story