“பெரும்பாலான ஜெல்லி மீன்கள் ஆபத்தானவை அல்ல” கொச்சி மத்தியகடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் ஜோஷி தகவல்
“பெரும்பாலான ஜெல்லி மீன்கள் ஆபத்தானவை அல்ல“ என்று கொச்சி மத்தியகடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் ஜோஷி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
“பெரும்பாலான ஜெல்லி மீன்கள் ஆபத்தானவை அல்ல“ என்று கொச்சி மத்தியகடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் ஜோஷி தெரிவித்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம் சார்பில் இந்திய கடற்கரை பகுதிகளில் காணப்படும் ஜெல்லி மீன்கள் குறித்த ஆய்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மீனவர்களுக்கு மன்னார் வளைகுடாவில் காணப்படும் ஆபத்தான் ஜெல்லி மீன் இனங்கள், அதன் கொட்டும் தன்மை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி மனோஜ்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முதன்மை விஞ்ஞானி ஜெகதீஷ், விஞ்ஞானி ரஞ்சித், ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக கொச்சி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய கடல்வாழ் உயிர் பல்வகைமை பிரிவு தலைவர் ஜோஷி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆபத்தானவை அல்ல
ஜெல்லி மீன்கள் குழியுடலிகள் வகையை சேர்ந்தது. இது சொறி மீன்கள் என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான ஜெல்லி மீன்கள் ஆபத்தானவை அல்ல. சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் ஜெல்லி மீன்கள் உணவுக்கு பயன்படுத்தப்படுகின்றன. வியட்நாம், ஜப்பான், தாய்லாந்து, சீனா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு விசாகபட்டினத்தில் இருந்து ஜெல்லி மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் ஆபத்தான ஜெல்லி மீன்களும் உள்ளன. இந்த ஜெல்லி மீன்கள் கொட்டும் தன்மை கொண்டவை. சிலவகை ஜெல்லி மீன்கள் கொட்டினால் உயிர் இழப்பு ஏற்படும். மன்னார் வளைகுடா பகுதியிலும் இத்தகைய ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன. தூத்துக்குடியில் கடந்த ஜூன் மாதம் ஜெல்லி மீன் கொட்டி 2 மீனவர்கள் உயிர் இழந்து உள்ளனர். எனவே மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனை மீனவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர்களுக்கு முதலுதவி பெட்டி
நிகழ்ச்சியில் மீனவர்களுக்கு முதலுதவி பெட்டி மற்றம் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி பகுதியில் உள்ள ஜெல்லி மீன் வகைகளும், பாதுகாப்பு அணுகு முறைகளும் என்ற துண்டு பிரசுரம் ஆகியவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முதன்மை விஞ்ஞானிகள் ஆஷா, சுஜா, விஞ்ஞானி லிங்கபிரபு மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story